மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 பிப் 2018

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -3

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் -3

இராமானுஜம்

புரொஜெக்டர் தொழில்நுட்பமும் திரையரங்கும்

மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பின் தமிழகத்தில் சுமார் 2500 திரையரங்குகள் தமிழகத்தில் இயங்கி வந்தன. இதில் நிரந்தரமான திரையரங்குகள், தற்காலிகமான திரையரங்குகள் (டூரிங் கொட்டகைகள்) என இருவகையான தியேட்டர்கள் திரைப்படங்களைத் திரையிட்டுவந்தன.

தியேட்டர் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதற்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்ற விதிகள் அரசால் விதிக்கப்பட்டன. அவற்றில் புரொஜக்டர் வசதியும் ஒன்று. ஒரு புரொஜக்டரின் விலை ரூ. 65000 முதல் 200000 லட்சம் வரை இருந்தது. நிரந்தரமான தியேட்டர்களில் இரண்டு, டூரிங் கொட்டகைகளில் ஒன்று என புரொஜெக்டர்கள் இருக்கும். சிலைடு மூலம் விளம்பரம் போடும் சிறிய வகையிலான புரொஜக்டர் ஒன்றும் இருக்கும். தியேட்டர் இருக்கும் பகுதிகளில் இருக்கும் ஜவுளிக் கடை, நகைக் கடை, ஹோட்டல் விளம்பரங்கள் சிலைடு மூலம் படம் தொடங்குவதற்கு முன்பும் படத்தின் இடைவேளையிலும் திரையில் காட்டப்படும். இதன் மூலம் தியேட்டர்களுக்குக் குறிப்பிட்ட மாத வருவாய் உத்தரவாதமாகக் கிடைத்துவந்தது.

டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடத் தொடங்கிய பின் சிலைடு கலாச்சாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. இதனால் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் வெளியிடும் வாய்ப்பைச் சிறுதொழில் செய்வோர் இழந்ததுடன் தியேட்டர்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

பிலிம் ரோல் மூலம் படங்கள் திரையிடும்போது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 50 தியேட்டடர்களில் மட்டும் புதிய படங்கள் ரீலீஸ் செய்யயப்படும். இது கால ஓட்டத்தில் 120 தியேட்டர்கள் வரை உயர்த்தப்பட்டது.

வருமானத்துக்கான உத்தரவாதம்

பிரிண்ட் மூலம் திரையிட்டபோது மக்களைக் கவர்ந்த படங்கள் 50 நாட்கள் 100 நாட்கள் என ஓடின. ரீலீஸ் சென்டரில் (புதிய படங்களை வெளியிடும் திரையரங்குகள்) தொடங்கி அடுத்தடுத்த நிலைகளில் உள்ள தியேட்டர்களில் இப்படங்கள் ஓட்டி முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட படத்தின் உரிமை வாங்கிய விநியோகஸ்தருக்கு வருடம் முழுவதும் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாக இருந்தது. ரீலீஸ் சென்டரில் சுமாராகப் போன படம் ஷிப்டிங் சென்டரில் (அடுத்த நிலைகளில் உள்ள திரையரங்குகள்) வசூலைக் குவித்ததும் உண்டு. படம் அனைத்து சென்டர்களிலும் ஓடி முடியும்போது நஷ்டமின்றித் தப்பிக்கவும், அபரிமிதமான லாபத்தை சம்பாதிக்கவும் வாய்ப்பு இருந்தது. ரீலீஸ் படங்களை ஷிப்டிங் உரிமை வாங்கி தொழில் செய்த விநியோகஸ்தர்கள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்தினார்கள்.

மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் செழித்ததுபோல் பிரிண்ட் நடைமுறையில் சினிமா விநியோகத் துறையில் தொழில் செய்த விநியோகஸ்தர், பெட்டி தூக்குவோர், படப் பிரதிநிதி, போஸ்டர் ஒட்டுவோர், சிறு அச்சககங்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் ஏராளம். புதிய படவெளியீட்டின்போது தியேட்டருக்குப் படப் பெட்டி கொண்டுவருவதைத் திருவிழா ஊர்வலம் போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

சினிமா வசூல் பணப் புழக்கம் தினமும் வளமாக இருந்ததற்குப் பிரதான காரணியாக பிரிண்ட் திரையிடல் முறை இருந்ததை மறுக்க முடியாது. அதேபோல் தியேட்டர்களில் இரண்டு புரொஜக்டர்கள் மூலம் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்குத் தனி மரியாதை இருந்தது. டூரிங் கொட்டகைகளில் நான்கு பாகமாகப் படங்கள் திரையிடப்படும். இரண்டு புரொஜெக்டர் இருக்கும் தியேட்டர்களில் இரண்டு பாகமாகத் திரையிடப்படுவதால் படம் பார்ப்போருக்கு நேரம் மிச்சமானது. பொருளாதார அடிப்படையில் வளம் பெருக்குவதாகவும், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் இருந்ததால் புதிய படங்கள் திரையிடல், திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது.

தொழில்நுட்பத்தால் மாறிய சினிமாவின் முகம்

சினிமாவின் நவீன தொழில்நுட்ப வளர்சியில் பழைமையைத் தொலைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கியபோது சினிமாவின் முகம் மாறியது. தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்த தன்னம்பிக்கை தடுமாற்றம் கண்டது. தாங்கள் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்த படங்களைத் தியேட்டர்களில் திரையிட முதலீடு செய்யாத டிஜிட்டல் நிறுவனங்களின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியதானது.

இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக டிஜிட்டல் நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்த தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் பெற்றது என்ன? இழந்தது என்ன?

நாளை…

பகுதி 1

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 26 பிப் 2018