மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

தீவிரவாதி தாக்குதல்:2 காவலர்கள் உயிரிழப்பு!

தீவிரவாதி தாக்குதல்:2 காவலர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் காவலர்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள், அவர்களது துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் உயிர்ச்சேதங்களும் பொருட்சேதங்களும் தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டும்வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையருகே 500 மீட்டர் தொலைவில் தங்கி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டுவந்தது. பாகிஸ்தான் ராணுவம் உருவாக்கிய நிலைகளிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துவந்தது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் நிலைகளை இந்திய ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டு வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தித் தகர்த்தனர்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 25) பாகிஸ்தானிலிருந்து எல்லை வழியாக 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருவேறு இடங்களில் ஊடுருவி காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பரூக் அஹ்மத் என்ற காவலரைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பின்னர் அவரது துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளனர். அதேபோல, புட்கம் மாவட்டத்திலுள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குல்தீர் சிங் என்ற காவலரையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, அவரது துப்பாக்கியையும் பறித்துச் சென்றனர்.

துப்பாக்கியால் சுட்டதால் படுகாயமடைந்த குல்தியார் சிங், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி குல்தியார் சிங் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினரும் காவல் துறையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

திங்கள், 26 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon