மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது?

அரசு ஊழியர்: ஜெ. அமைத்த ஆய்வுக் குழு என்ன ஆனது?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான (ஜாக்டோ - ஜியோ) சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட குழு என்ன ஆனது என்று பாமக நிறுவனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

இதுபற்றி நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா அமைத்த அந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் அதன் பதவிக்காலம் 3 தடவை நீட்டிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சாந்தா ஷீலா நாயர் விலகிய நிலையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா? அக்குழு தொடர்கிறதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை’’ என்பதை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ்,

“புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011=ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அநத வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தொகுப்பூதியத்தை நீக்கிவிட்டு காலமுறை ஊதியம் வழங்குவது 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை அளிப்பது என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படாதது நியாயமல்ல’’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

சனி, 24 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon