மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

எம்பெருமானாரின் ஏழு நாட்கள்!

 எம்பெருமானாரின் ஏழு நாட்கள்!

அரங்கனின் சன்னிதிக்கு சென்று வந்த ராமானுஜரின் கண்களில் ஒரு ரகசியம் மின்னிக் கொண்டிருந்தது. அரங்கன் சன்னிதியில் இருந்து மீண்டும் சேரன் மடத்துக்குத் திரும்பும்போது ராஜ நடையோடு உடையவர் வந்தார் என்று ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்ற கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கிரந்தத்தை எழுதியவர் வடிவழக நம்பி தாசர்.

வைணவ குருமார்களின் வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் முயற்சியில் பல்வேறு பட்டோர் ஈடுபட்டனர்.

அரிசமய தீபம் என்ற சடகோபதாசர் என்பவர் 12 ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர் ஆகியோரின் வரலாற்றை 1,400 பாடல்களாக வடித்துள்ளார்.

இராமானுச சரிதை என்ற பெயரில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பாகை சீதராம தாசர் 750 செய்யுள்களாக செய்துள்ளார்.

இராமானுஜாசார்ய திவ்ய சரிதை என்ற பெயரில் பிள்ளை லோகம் ஜீயர் மணிப்பிரவாள நடையில் எழுதியுள்ளார்.

திவ்ய சூரி சரிதம் என்ற பெயரில் வங்கிபுரம் சீனிவாசாச்சாரியார் பன்னிரு ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோரது வரலாற்றை 2,824 பாடல்களாக படைத்துள்ளார்.

பெரிய திருவடி அடைவு என்ற பெயரில் கந்தாடையப்பன் குருபரம்பரை ஆச்சாரியர்கள் பற்றிய தொகுப்பை ஆக்கியுள்ளார்.

இவர்கள் எல்லாம் 15,17ஆம் நூற்றாண்டுளைச் சேர்ந்தவர்கள். ஆனால் 11-ம் ஆம் நூற்றாண்டிலேயே குருபரம்பரா பிரபாவம் என்ற தொகுப்பை அளித்தவர்தான் வடிவழகிய நம்பி தாசர். 2 ஆயிரத்து 965 தமிழ் செய்யுள்கள் அடங்கிய குருபரம்பரா பிரபாவத்தில் ஸ்ரீ ராமானுஜ வைபவம் என்றே தனியாக எழுதியிருக்கிறார் வடிவழகிய நம்பி தாசர். அந்த பாடல்கள் ராமானுஜரின் நெடும்பயணத்தை நமக்கு நெஞ்சைத் தொடும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இற்றைக்கு ஏழா நாள் அன்பாய் அமரர் எல்லாரும்
வானார் சோதி தா வருவர் மண்ணோர் இரங்க விண் துதிப்பப்
போதா மன்னும் பெரு வீட்டில் என்றாங் கரங்கர் புகழுடைய
தானாய் நின்றன் தனக்களிப்பச் சரணாகதியை உச்சரித்தே

என்கிறார் வடிவழகிய நம்பிதாசர்.

இது முக்கியமான பாடல்.

ஆம்... அரங்கனை தரிசித்த ஏழாம் நாள் ராமானுஜரின் இம்மை வாழ்க்கையின் கடைசி நாள் என்று முடிவு செய்யப்படுகிறது.

அரங்கனை தரிசித்த ராமானுஜர், ‘இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யசூரிகளுடன் சம்பந்திக்க விழைகிறேன். இச்சுவை போதும் அச்சுவை தாரும் பெருமாளே’ என்று கேட்கிறார். பிராட்டியிடமும் இதற்காக புருஷகாரம் செய்ய பிரார்த்திக்கிறார். தனக்கு மட்டுமல்ல தன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மோட்சம் வேண்டும் என்று ராமானுஜர் இறைஞ்சுகிறார். அதற்கு அரங்கன் சம்மதிக்கிறார்.

சம்பந்தம் என்றால் தேக சம்பந்தம் அல்ல. திருவடி சம்பந்தம். ஆம்.,ராமானுஜரை சரணாகதி அடைந்தால் மோட்சம் பெறலாம் என்பதே இதன் உள் கருத்து.

’’உடையவரே உம் அழைப்பை ஏற்றோம். உமக்கு இச்சுவை நிறைந்து அச்சுவை தர முடிவெடுத்தோம். இன்றிலிருந்து ஏழாம் நாள் நீர் பரமபதம் அடைவீர்’’ என்று அரங்கன் அருள் வாக்கு அளித்தார் என்றுதான் வடிவழகிய நம்பிதாசரின் ராமானுஜ வைபவத்தின் அந்த செய்யுள் கூறுகிறது.

எம்பெருமானார் வைபவம் எனப்படும் ராமானுஜ வைபத்தை உரைநடையாக்கிய நமது பெரியோர்கள் குறிப்பிட்ட அந்த பத்திகளை அதே இயல்போடு இதோ காணுவோம்.

இதன் பிறகுதான் ராமானுஜ ராஜ நடையோடு தனது 120 ஆம் அகவையிலும் உடல் நலம் குன்றாது சேர மடத்துக்கு ராஜ நடைபோட்டு வருகிறார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் சிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவித்துக் கொண்டிருந்தார்.

கூரத்தாழ்வானின் பிள்ளை பராசர பட்டரை அழைத்து, ‘’குழந்தை... சில முக்கியமான அர்த்தங்களை உங்களுக்கு அறிவிக்க வேண்டியுள்ளது’’ என்று வெகு ஆர்வமாக பல உபதேசங்களை அந்த கடைசி நாட்களில் மிகவேகமாக அருளிச் செய்தார் ராமானுஜர்.

அப்போது பராசர பட்டரை அழைத்து தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார் ராமானுஜர். அப்போது ராமானுஜரின் வைணவ தத்துவங்களை மிக வீரியமாக மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர் பராசர பட்டார். மேல்நாட்டில் இருக்கும் மாதவாச்சாரி உள்ளிட்ட வேதாந்திகளை வைணவத்துக்கு அழைத்து வந்தது ராமானுஜரின் உத்தரவுப்படி பராசர பட்டர்தான் என்பதை முன்பே நாம் பார்த்தோம்.

அப்பேற்பட்ட பட்டரை அழைத்து தன் முன்பு நிற்க வைத்தார்.

‘’இந்தக் குழந்தை அடியேனின் நெஞ்சுக்கினிய கூரேசனின் குழந்தை. கூரேசன் எனக்கு முன்னாலே மோட்சம் பெற்றுச் சென்றுவிட்டார். அதற்குக் காரணம் என்ன சொன்னார் தெரியுமா? ஆச்சாரியர் மோட்சத்துக்கு வரும்போது அங்கே இருந்து ஆச்சாரியரை வரவேற்க வேண்டியது சிஷ்யனின் கடமை என்று நம்மாழ்வார் பாசுரத்தை நமக்கே மேற்கோள் காட்டி ஏற்கனவே சென்றுவிட்டார்.

நான் உங்களுக்கு சில செய்திகளை சொல்ல இருக்கிறேன். இனி கூரேசனின் குழந்தையான பட்டருக்கு நீங்கள் அனுகூலமாக இருக்க வேண்டும். எனக்கு எப்படி இருந்தீர்களோ, அதேபோல இனி பட்டருக்கு தாங்கள் அனுகூலமாக இருக்க வேண்டும்’’ என்று ராமானுஜர் சொல்லிக் கொண்டிருந்தபோதே

சிஷ்யர்கள் கதற ஆரம்பித்தனர்.

‘எம்பெருமானாரே என்ன சொல்கிறீர்கள்?’’ என்று அழுது அரற்றினர்.

ஆம்... அவர்களுக்கு எம்பெருமானார் பதில் சொன்னார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகனின் சேவை வைணவக் காற்றில் ஆழ்வார்களின் கீதம் போல கலந்திருக்கிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon