மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பசு: ரூ.5,100 அபராதம்!

பசு:  ரூ.5,100 அபராதம்!

ஹரியானாவில் பசுக்களை அநாதையாகச் சாலையில் விடுபவர்களுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

ஹரியானா பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர் பானி ராம் மங்களா, ஒரு கூட்டத்தில் பேசுகையில், ‘மாடுகளின் பாதுகாப்புக்காக, பசு கழுத்தில் இருக்கும் எண்ணின் அடிப்படையில் விலங்குகளின் இடத்தையும், மாவட்டத்தையும் பற்றிய தகவலை வெளிப்படுத்தும் ஒரு ஆப் தயாரிக்கப்படுகிறது’ என்றார்.

அப்போது 24 மாட்டுத் தொழுவங்கள் அமைக்க ரூ.26.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய அவர், “அனைத்து கிராமங்களிலும் பசு சேவை மையங்கள் தொடங்கப்படும். இதற்காக, அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்தப் பசு சேவை மையங்களில் பதிவு செய்வது கட்டாயம். சேவை மையங்களின் சிறந்த செயல்பாட்டுக்காக திறமையுள்ள குழு அமைக்கப்படும். இதற்காக, ஆயாக் ஆண்டுதோறும் ரூ.5,000 வழங்கும். 90 சதவிகித மானியத்தில் பசு சாணம், சிறுநீரில் இருந்து சோப்பு, விளக்கு, தரை துடைப்பு, கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்க கருவிகள் வாங்கி கொடுக்கப்படும். மேலும், அதிக நிலங்களைக் கொண்டுள்ள மாட்டுத் தொழுவங்களுக்குத் தீவனம் வெட்டும் எந்திரத்திற்கு 90 சதவிகித மானியம் வழங்கப்படும்.

கறவை நின்ற பசுக்களைப் பராமரிப்பதில் சிரமப்படும் பலர் அவற்றைச் சாலைகளில் அநாதையாக விடுகின்றனர். அப்படி விடுபவர்களுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்படும்” என்று கூறினார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon