மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஓ.பி.எஸ். அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்!

ஓ.பி.எஸ். அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்!

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பன்னீர்செல்வமே காரணம் எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

தஞ்சையில் தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 13) நடந்தது. அதில் பேசிய தினகரன், “ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றவுடனேயே புதிய கட்சியைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி, யாராவது ஒருவர் புதிய கட்சியைத் தொடங்கினால், அவரது அடிப்படை உறுப்பினர் தகுதி தானாகவே காலாவதியாகிவிடும். இரட்டை இலைச் சின்னம், கட்சி ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில், புதிய கட்சியைத் தொடங்கினால் வழக்கிலிருந்து விலகிக்கொண்டது போலவும் ஆகிவிடும். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும். தற்போது கட்சிக்குப் பெயர், சின்னம் இல்லை என்பதால், புதிய பெயர் மற்றும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். இதன் தீர்ப்பு விரைவில் வரும்” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆர்.கே.நகரில் இரட்டை இலை தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் பன்னீர்செல்வம். அவரது சுயநலத்தால்தான் தோல்வியடைந்தது. அவர் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார். எந்த தினகரனால் அவர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வராக ஆக்கப்பட்டாரோ அந்தத் தினகரனாலேயே ஓரங்கட்டப்படுவார். அவரது பழைய தொழிலைத் தொடங்குவதற்கு நிச்சயம் ஏற்பாடு செய்வேன்” என்று குறிப்பிட்டார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon