மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

தொடரும் கோயில் தீ விபத்துகள்!

தொடரும் கோயில் தீ விபத்துகள்!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும், திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் நேற்றிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நேற்றிரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான நடனக் கலைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு உணவுகளைத் தயார் செய்யும் வேலை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென கேஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயிலிலிலிருந்து அலறியடித்து வெளியேறினர். இதனால் கோயில் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. கோயில் ஊழியர்கள் தண்ணீரில் சாக்கை நனைத்து கேஸ் சிலிண்டர் மீது போட்டுத் தீயை அணித்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதேபோல், திருவாரூர் தியாகராஜர் சாமி சன்னதியில் மூலஸ்தான பிராகாரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி சன்னதியில் நேற்றிரவு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு 10.30 மணி அளவில் மகாலட்சுமி சன்னதியில் ஏற்றப்பட்டு இருந்த அகல் விளக்கு மூலம் அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த வஸ்திரத்தில் தீ பிடித்தது. இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோயில் அலுவலகத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து கோயில் ஊழியர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால், அம்மன் சன்னதியில் உடனடியாக நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு, மீனாட்சி அம்மன் கோயில், ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் தீவிபத்து ஏற்பட்டு, 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.பிப்ரவரி 6ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. பிப்ரவரி 7ஆம் தேதி திருவாலங்காட்டில் உள்ள புகழ்பெற்ற வடாராண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம் பற்றி எரிந்து சாம்பலானது. வேலூர் பொன்னியம்மன் கோயிலில் இருந்த 2 தேர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு சாம்பலானது. பிப்ரவரி 8ஆம் தேதி மின்கசிவு ஏற்பட்டதால், மீண்டும் மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon