மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை: கமல்

இனி படங்களில் நடிக்கப்போவதில்லை: கமல்

அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல் இந்தியா டுடேவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். “வெளிவரவுள்ள இரு படங்களுக்குப் பிறகு இனி படங்களில் நடிக்கப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான வேடங்களைத் துணிந்து ஏற்று முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழும் கமல் சினிமாவின் அனைத்துத் துறை சார்ந்த அறிவையும் பெற்றவர். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் கமல் புதிய தொழில்நுட்பங்களைத் தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்துபவராகவும் இருந்துவருகிறார்.

அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த கமல் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். வரும் பிப்ரவரி 21 அன்று ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ள அவர் தனது கொள்கைகளையும் அன்றைய தினம் அறிவிக்கவுள்ளார்.

கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகியவை உருவாகிவருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டார். எனவே இந்தப் படங்களுக்குப் பிறகு முழுக்க அரசியலில் கவனம் செலுத்துவார் எனக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமலின் வருகையால் அரசியலில் மாற்றம் வரும் என அவருடைய ரசிகர்கள் கூறினாலும் திரைத் துறையில் அது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon