மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பேருந்துக் கட்டண உயர்வில் பேரம்: துரைமுருகன்

பேருந்துக் கட்டண உயர்வில் பேரம்: துரைமுருகன்

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேரம் பேசிப் பேருந்துக் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 13) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குறிப்பாக ரவுடிகள் ஒன்று சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுப்போய்விட்டது. நகைப் பறிப்புச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றன.

அதிமுக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “வேலூர் மாவட்டத்தில் கொலைகள் ஏராளமாக நடக்கின்றன. அமைதி, வளம், வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும். அவர்கள் சட்டசபையைச் சொந்த வீடு என்று நினைத்துவிட்டார்கள். அவர்களை வெளியே தூக்கிப்போடும் காலம் வரும். அதிமுக கட்சிக்குள் அவர்களுக்குள்ளேயே அவர்களைக் கவிழ்க்க ‘மங்காத்தா’ விளையாடுகிறார்கள். திமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களால்தான் தமிழகத்தில் மின்சாரம் தடையின்றிக் கிடைக்கிறது” என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

கல்வி கெட்டுப்போய்விட்டது; பல்கலைக்கழகப் பணி நியமனங்களுக்காகப் பலர் பணம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், “நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திமுக அழிந்துவிடும் என்றார். அண்ணா விதைத்த திமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஓய்வெடுக்கும் சிங்கம் கலைஞர் வழியிலேயே அவரது சிங்கக்குட்டி ஸ்டாலின் இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவார்” என்றும் தெரிவித்தார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon