மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஈஷா யோக யக்ஷா கலை விழா: சுருதி பிசகாத இசை

ஈஷா யோக யக்ஷா கலை விழா: சுருதி பிசகாத இசை

கிருஷ்ண பாகவதர்

கோவை ஈஷா சார்பில் யக்ஷா கலை விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி.

11.02.2018. மாலை 6.45

வாய்ப்பாட்டு: ஸ்ருதி சடோல்கர்

ஹார்மோனியம்: ஆனந்த் ஜோஷி

தபேலா: மேக்னாத் குண்ட்டே

அக, புற நினைவுகள் அனைத்தும் அகன்று, இக லோகச் சிந்தனைகள் எதுவும் இன்றித் தன் வசம் நம்மை வயப்படுத்தும் ஆற்றல் உடையது இசை. நமக்கு அதிகம் பரிச்சயமான கர்னடாக இசை செய்யும் இந்த ஜால வித்தையை இன்னும் சற்று அதிகமாகவே அன்று ஸ்ருதி சடோல்கரின் இந்துஸ்தானி இசை வாய்ப்பாட்டு நிகழ்த்தியது.

மும்பை பல்கலைகழகப் பட்டதாரியாகத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய விதூஷி ஸ்ருதி சடோல்கர், தற்பொழுது லக்னோவில் உள்ள பட்கன்டே நிகர் நிலை இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மட்டுமின்றி இந்துஸ்தானி இசையின் ‘கயால்’ வாய்பாட்டு முறையின் முடிசூடா அரசியாகவும் திகழ்கிறார்.

ஜெய்பூர்-ஆத்ராலி கரானாவைத் தோற்றுவித்த அல்லாடியா கான் மற்றும் அவரது மகன் பூஜ்ரிகான் ஆகியவர்களிடமிருந்தே நேரடியாக அந்தப் பாணியில் கயால் பாடும் முறையைக் கற்ற பெருமைக்கு உரியவர் ஸ்ருதி. கேட்போர் மனம் உருகும் வண்ணம் இனிமையாக பாடும் குரல் வளம் பெற்றவர். பக்தி பாடல்களில் மேலும் அதிகமாக வெளிப்படும் அந்த குரல் இனிமை, அவரது 67 ஆவது வயதிலும் மாறாமல் இருந்த மாயத்தை அன்றைய நிகழ்வில் அவர் பாடிய பக்திப் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள் உணர்ந்தார்கள்.

கச்சேரியின் தொடக்கமாக சடோல்கர் எடுத்து கொண்ட ஸ்ரீராகம், பூர்வா தாட் என்ற பெரும் பிரிவின் கீழ் அமைந்த ஒரு கிளை ராகம். பின் மாலைப் பொழுதிலிருந்து நடு இரவு வரை பாடப்படும் இந்த ராகம் சிவனைப் போற்றி அமைந்த பகதிப் பாடல்களுக்கு உகந்தது. எழுச்சியுடன் கூடிய ஆன்மிக உணர்வை அழகுடன் வெளிப்படுத்தும் இந்த ராகம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. சீக்கியர்களின் புனித நூலாக விளங்கும் குரு கிரந்த சாஹிபின் சுமார் 31 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் ‘சப்தங்கள்’ என்ற பாசுரங்கள் இந்த ராகத்தில்தான் பாடப்படுகின்றன.

கயால் என்பது என்ன?

சடோல்கர் முதலில் பாடிய ‘கஹான் மேரி குரு, தூண்டுன ஜாவும்’ (எங்கே எனது குரு, எங்கு சென்று தேடுவேன்) என்ற கயால் பாடலைப் பற்றிப் பார்க்கும் முன்பு, ‘கயால்’ என்ற பாடல் வகையைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் அவசியம். முகலாய, பர்சிய இசை கலப்பிற்கு முந்தய காலம் வரை, கர்னாடக இசையின் ‘கீர்த்தனை’ போன்ற வடிவத்தில் இருந்த ‘துருபத்’ என்ற பாடல் வகை மட்டுமே இந்துஸ்தானி இசையின் முக்கியமான, ஒரே பாடும் முறையாக இருந்தது. பல்லவி, அனுபல்லவி, சரணம், என்ற வரிசையில் ஆழ்ந்த, மொழி வல்லமை உடைய வாக்கேயக்காரர்களின் அந்த இசை வடிவங்களுக்கு மாற்றாய் உட்புகுந்த கயால், ஒப்பீட்டளவில் பரம்பரியத் தன்மை சற்றுக் குறைவானது எனக் கருதப்படுகிறது.

கயால் எளிமையானதொரு இசை வடிவம். சாமானியர்களும் சட்டென்று புரிந்துகொள்ளும் எளிதான வரிகளில், ஆழம் மிகுந்த சிறந்த பல கருத்துகளை இனிமையான ராக, தாளப் பின்னணியில் உணர்த்தும் பிரபல இசை வடிவமாக விளங்குகிறது.

பொதுவாக கயால் பாடகர்கள் பின்பற்றும் வழக்கப்படி, சடோல்கர் விளம்பித் காலத்தில் (மெதுவாக, ஆலாபனையுடன் கூடிய ராகத்தின் முதல் பகுதி) ஏக் தாளத்தில் (ஆதி தாளம் போன்றது) படா கயால் என்ற ஒரு நாலு வரிப் பாட்டையும் எடுத்துக்கொண்ட அதே ஸ்ரீராகத்தில் துரித காலத்தில் (விரைவான நிறைவுப் பகுதி) மற்றொரு இரண்டு வரிப் பாட்டையும் பாடிப் பரவசப்படுத்தினார்.

இரண்டாவதாக சடோல்கர் பாடிய ‘மஹாதேவ’ என்று தொடங்கும் பாடல், கமாஜ் தாட் பிரிவில் உள்ள செஞ்சுட்டி ராகம். செஞ்சுருட்டி என்ற பெயரில் கர்னாடக இசையில் உள்ள ராகத்துடன் தொடர்பில்ல்லத இந்த இந்துஸ்தானி ராகம் ஒரு சம்பூர்ண ராகம் (ஆரோஹண - அவரோஹணத்தில் ஏழு ஸ்வரங்களும் கொண்ட ராகம்). மத்திய ராத்திரி என்ற பின் இரவில் பாடப்படும் இந்த ராகத்தில் காதல், பிரிவு, ஆற்றாமை போன்ற மென்மையான உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த ராகத்தின் இடையில் தபேலாவில் தனக்கிருக்கும் தனித்திறமையை ரசிகர்களின் நீண்ட கரவொலிகளின் வாயிலாக மேக்னாத் குண்டே வெளிப்படுத்தியது குறிப்பிடத் தகுந்தது. தொடக்கம் முதல் இறுதிவரை வாய்ப்பாட்டைத் தன் இனிமையான ஹார்மோனிய இசையால் நிழலாகப் பின்தொடர்ந்த ஆனந்த் ஜோஷியை சடோல்கர் அவ்வப்போது தலை அசைத்துப் பாராட்டியதும் ரசிக்கத் தக்கது.

நந்தன் ராகத்தில் அமைந்த ஒரு ‘சோட்டா’ கயாலுக்குப் பிறகு நிகழ்வின் நிறைவாக ஸ்ருதி சடோல்கர் பாடிய பக்திப் பாடல் மிகவும் புகழ் பெற்ற வித்தியாசமான பாடல். கயால், பந்திஷ் டப்பா தும்ரி போன்ற எந்த குறிபிட்ட வடிவமும் இல்லாத, ஏறக்குறைய, நமது மெல்லிசைப் பாடல் போல அமைந்த அந்தப் பாடல் பஜன்மாலா என்ற தனிப்பாடல் தொகுப்பில் உள்ள மிஸ்ர பைரவி ராகப் பாடல். இயற்றியவர் யார் என்று சரியாகக் கூற இயலாத அந்த இனிமையான பாடலுக்கு இசை அமைத்து மெட்டு தந்தவர் எம்.எம். கரீம் என்ற பாடல் தொகுப்பாளர். ‘கைஸ்ஸே கட்டி தின் ஜத் தைய்யோ என்ற அந்த போஜ்பூரிப் பாடலின் பொருள் இப்படிச் செல்கிறது:

எப்படிக் கழியப்போகின்றன நாட்கள்

நீ என்னை விட்டுச் சென்றுவிட்டால் நான் என்ன செய்வேன்

உபாயம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் போ

ஒரு பக்கம் கங்கை ஒரு பக்கம் யமுனா நதி

நடுவில் இருக்கும் நான் உன்னை அடைய

ஒரு கப்பலைச் செய்யுட்டுமா - காகிதக் கப்பலை…

துக்கடா

கரக்பூர் ஐஐடி கல்லூரியில் பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெறுவதற்காக கொலம்பியா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த கிரண்சேத் (பின்னர் முனைவர் கிரண் சேத்) என்ற மாணவர் அங்கு நடந்த டாகர் சகோதரர்களின் துருபத் இந்துஸ்தானி இசை நிகழ்வை ஒரு சமயம் கேட்க நேர்ந்தது. அதுவரை தம்மைப் போன்றே அறியாது இருந்த இந்திய இளைஞர்களுக்கு நம் பாரம்பரிய இசை ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் நண்பர்களுடன் இணைந்து அவர் தோறுவித்த SPIC MACAY (The Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth (SPIC MACAY) is a voluntary youth movement which promotes intangible aspects of Indian culture) என்ற இயக்கத்தின் பணிகளில் தம்மை அர்பணித்துக்கொண்டு ஸ்ருதி சடோல்கர் ஆற்றிவரும் சேவைகள் அளப்பரியவை.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon