மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

இந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு!

இந்தியப் பெண்களுக்குக் கருப்பைப் புற்றுநோய் அதிகரிப்பு!

இந்தியாவில் 16 வயது முதல் 30 வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஒரு பரிசோதனை ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய ஐந்து நகரங்களில் வாழும் வளரிளம் பெண்கள் இந்தப் புற்றுநோயால் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.

நவீன வாழ்வில் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கருப்பைப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாகக் கருப்பைப் புற்றுநோய் ‘பாப்பிலோமா’ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. தற்போது இளம் பெண்கள் உட்பட அதிக அளவிலான பெண்கள் கருப்பைப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்தப் புற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்தியப் புற்றுநோய் கழகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கருப்பைப் புற்றுநோய் குறித்து நாடு முழுவதும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 3 ஆயிரம் பெண்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனை 16 முதல் அனைத்து வயதுப் பெண்கள் வரை நடத்தப்பட்டது. நாட்டில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த இந்தப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பரிசோதனை ஆய்வில், 16 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு அதிக அளவில் கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும், இவர்களில் 14 சதவிகிதம் பேர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அதேபோல 61 முதல் 85 வயது வரையிலான பெண்களில் 8.39 சதவிகிதம் பேர் இதே நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக நாட்டில் சென்னை உள்ளிட்ட மிகப்பெரிய ஐந்து நகரங்களில் வாழும் பெண்கள் இந்நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென் மண்டலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 9.78 சதவிகிதம் பேரும், மேற்கு மண்டலத்தில் 10.23 சதவிகிதம் பேரும் இந்தப் புற்றுநோய் ‘பாப்பில்லோமோ’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக நாடு முழுவதும் 8.04 சதவிகிதப் பெண்கள் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பரிசோதனை விவரங்கள் தெரிவிக்கிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon