மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஸ்டாலினை முதல்வராக்குவதே என் லட்சியம்! : வைகோ

ஸ்டாலினை முதல்வராக்குவதே என் லட்சியம்! : வைகோ

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக்கும் முடிவுடனே இக்கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில், பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழகமெங்கும் நேற்று (பிப்ரவரி 13) கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மதுரையில் நடந்த கண்டனக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

14 ஆண்டுகள் கழித்து திமுக மேடையில் தான் பேசுவதாகக் குறிப்பிட்டார் வைகோ. சில மாதங்களுக்கு முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் தன்னைப் பற்றி ஸ்டாலின் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். “கருணாநிதியின் காதோரம் சென்று, ‘வைகோ நம் கூட்டணிக்கு வந்துவிட்டார்’ என்று சொன்னார் ஸ்டாலின். அவர் என்னைப் புன்முறுவலோடு பார்த்தார். அவர் அருகே சென்று, ‘ஒரு காலத்தில் எப்படி உங்களுக்கு அரணாக, நிழலாக, கவசமாக இருந்தேனோ, அதைப்போல சகோதரர் ஸ்டாலினுக்கும் இருப்பேன்” என்று சொன்னேன்.

ஒரு காலத்தில் சங்கரன்கோவிலில் திமுகவை வெற்றிபெற வைத்ததால், என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. இப்போது, எந்தப் பதவியையும் தேடி, நான் இந்தக் கூட்டணிக்கு வரவில்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த கூட்டத்துக்கு வந்துள்ளேன். ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன். திமுகவை அழிக்கவிட மாட்டேன்” என்றார். மேலும், கழகம் இல்லாத தமிழகம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார் வைகோ.

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினும் வைகோவும் ஒரே மேடையில் இருந்தனர். நீண்டநாள் கழித்து, இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட கூட்டம் அது. அப்போது, ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் வைகோ. நேற்றைய கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாத நிலையிலும், அதே கருத்தை மீண்டும் அடிக்கோடிட்டுப் பேசியுள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon