மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ரதயாத்திரை விழாவில் ஆதித்யநாத் பங்கேற்கவில்லை!

ரதயாத்திரை விழாவில் ஆதித்யநாத் பங்கேற்கவில்லை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நேற்று (பிப்ரவரி 13) ராம ராஜ்ய ரத யாத்திரை தொடங்கப்பட்டது. 41 நாட்கள் தொடரும் இந்தப் பயணம் ராமேஸ்வரத்தில் முடிவடையவுள்ளது.

1990ஆம் ஆண்டு பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமெனக் கோரி ரதயாத்திரை மேற்கொண்டார். சோம்நாத்தில் பயணத்தைத் தொடங்கிய அத்வானி, பிகார் மாநிலத்திற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.

அதைப்போலவே, தற்போது ராம ராஜ்யா ரதயாத்திரை என்ற பெயரிலான பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. இதற்கான வாகனமும், அப்போது இருந்ததைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. விஹெச்பி அமைப்பின் தலைவர் சம்பத் ராய் இதனைத் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ரதயாத்திரை, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்தில் முடிவடையவுள்ளது. 41 நாட்கள் இந்த ரதயாத்திரை நடைபெறுமெனக் கூறப்படுகிறது.

இந்த ரதயாத்திரையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கிவைப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியானது. திரிபுரா மாநில தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருவதால், இதில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உத்தரப் பிரதேச பாஜக எம்பிக்கள் சிலர் இதில் கலந்துகொண்டனர்.

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்தே இந்த ரதயாத்திரை திட்டமிடப்பட்டுள்ளதாக்க் குற்றம்சாட்டியுள்ளன எதிர்க்கட்சிகள். இது தனியார் அமைப்பின் நிகழ்ச்சி என்றும், இதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று பொய்யாகக் காட்டிக்கொள்ளும் விதத்திலேயே ஆதித்யநாத் இதில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளன.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon