மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஈரோடு மஞ்சள் வரத்து சரிவு!

ஈரோடு மஞ்சள் வரத்து சரிவு!

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த வார ஏலத்துக்கு 300 மூட்டைகள் அளவிலான மஞ்சள் மட்டுமே விற்பனைக்காக வந்துள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மஞ்சள் சந்தையான ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ஏலத்தில் உள்நாட்டுத் தேவைக்காகவும், ஏற்றுமதிக்காகவும் இங்கு வந்து மஞ்சளை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் பிப்ரவரி 8ஆம் தேதி ஏலத்திற்கு 500 பைகள் அளவிலான மஞ்சள் வந்திருந்தது. அதனுடன் பழைய மஞ்சள் 2,500 பைகளும் சேர்த்து மொத்தம் 65 சதவிகித அளவிலான மஞ்சள் விற்பனையாகியிருந்தது. புது விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,699 முதல் ரூ.7,599 வரையிலும், புது வேர் மஞ்சள் ரூ.6,174 முதல் ரூ.7,255 வரையிலும் விற்பனையானது. பழைய விரலி மஞ்சள் ரூ.5,755 முதல் ரூ.7,786 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.5,255 முதல் ரூ.7,288 வரையிலும் விற்பனையானது.

இந்நிலையில் இந்த வாரத்துக்கான ஏலத்துக்கு 300 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்காக வந்திருந்தது. அதனுடன் பழைய மஞ்சள் 1,700 மூட்டைகளும் சேர்த்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 70 சதவிகிதம் மட்டுமே ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. புது விரலி மஞ்சள் விலை குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாயும், புது வேர் மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு 50 ரூபாயும் உயர்ந்திருந்தது. ஈரோடு மஞ்சள் வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஏலத்தில், விரலி மஞ்சள் ரூ.6,365 முதல் ரூ.7,854 வரையிலும், வேர் மஞ்சள் ரூ.6,008 முதல் ரூ.7,280 வரையிலும் விலை போனது. இந்த ஏலத்தில் விற்பனைக்காக வந்திருந்த 1,452 பைகளில் 763 பைகள் மட்டுமே விற்பனையாயின.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon