மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவக் கண்காட்சி!

சென்னையில் நாளை முதல் சித்த மருத்துவக் கண்காட்சி!

சென்னையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நாளை முதல் நான்கு நாட்கள் ‘நலம்வாழ் சித்த மருத்துவக் கண்காட்சி- 2018’ நடைபெறவுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகள், பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறை.

சித்தா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையைப் படிக்கும் மாணவர்கள், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளில் உள்ள மருத்துவக் குணங்களை அனைவரும் அறியும் வகையில் சித்த மருத்துவக் கண்காட்சியை நடத்தவுள்ளனர். சென்னை அரும்பாக்கத்திலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நாளை (பிப்ரவரி 15) முதல் வரும் 18ஆம் தேதி வரை ‘நலம்வாழ் சித்த மருத்துவக் கண்காட்சி – 2018’ நடைபெறவுள்ளது.

"இந்தச் சித்த மருத்துவக் கண்காட்சியைச் சித்த மருத்துவ மாணவர்களுடன் கல்லூரியும் இணைந்து நடத்துகிறது. நாளை திறக்கப்படவுள்ள இந்தக் கண்காட்சியை நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கிவைக்கிறார்கள்" என அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.கனகவல்லி தெரிவித்தார்.

"600 வகையான மருத்துவ மூலிகைகளின் கண்காட்சி, சிகிச்சை குறித்து சித்த மருத்துவர்களின் கருத்தரங்கம், நோய்த் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள், நிலவேம்பின் முக்கியத்துவம், மூலிகைத் தோட்டம் அமைப்பதன் முக்கியத்துவம், சிறுதானிய உணவு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெறுகின்றன" என இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் பூவரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மக்களுக்குத் தொற்றா நோய்கள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கான தீர்வு சித்த மருத்துவத்தில் உண்டு. பொதுமக்களுக்கு ’சித்த மருத்துவம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த மருத்துவக் கண்காட்சியை நடத்துகிறோம். இந்தக் கண்காட்சியில் எந்த நோய்க்கு எந்த மாதிரியான யோகா, வர்மம் மற்றும் புற மருத்துவம் செய்யலாம் என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி விளக்குவதற்காக இந்தக் கண்காட்சியில் 20 அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் இலவச மருத்துவ முகாமும் நடைபெறும் என்று கே.கனகவல்லி தெரிவித்துள்ளார்.

காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு ரூபாய் என்று தெரிவித்துள்ளனர்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon