மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

25 வருடம் காத்திருந்த இந்திய அணி!

25 வருடம் காத்திருந்த இந்திய அணி!

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது மட்டுமின்றி 25 வருடங்களாக வெல்ல முடியாத தொடரை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம் அளித்தாலும், ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்ற 5ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என முன்னிலை பெற்றதுடன், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 1992ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதிலிருந்து இந்தத் தொடருக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றதே கிடையாது. இந்தமுறை 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது.

அது மட்டுமின்றி, 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள இருதரப்பு ஒருநாள் தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் தொடர்ச்சியாக 9 தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 14 தொடர்களைத் தொடர்ச்சியாகக் கைப்பற்றியதே இதுவரை அதிகபட்சமாக இருந்துவருகிறது. விராட் கோலியின் தலைமையில் பிறகு இந்திய அணி விளையாடியுள்ள முதல் 40 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 32 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல் 40 ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 33 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவர் 16) செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி 5-1 என தொடரைக் கைப்பற்றும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon