மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

நிலக்கரித் தட்டுப்பாடு சீராகிவிடும்!

நிலக்கரித் தட்டுப்பாடு சீராகிவிடும்!

அடுத்த நிதியாண்டில் மின்னுற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியானது எவ்விதத் தட்டுப்பாடுமின்றி விநியோகம் செய்யப்பட்டு விடும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

வரும் 2018-19 நிதியாண்டுக்கான மின்னுற்பத்தித் தேவைக்காக மொத்தம் 615 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி தேவைப்படுவதாக மின்சாரத் துறை கோரியுள்ளது. மேலும், வெப்ப மின்னுற்பத்தி ஆலைகளுக்கென 288 பெட்டிகள் அளவிலான நிலக்கரி வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கரி விநியோகம் குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சரான பியூஷ் கோயல் பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடையேயான சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “மின்னுற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியை எங்களால் விநியோகம் செய்ய முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது நிலக்கரிச் சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் பணியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் நடைமுறை மிக எளிதாகியுள்ளதால் நிலக்கரி உற்பத்தியும் விநியோகமும் அதிகரிக்கும்” என்றார்.

மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல், மின்னுற்பத்தித் திட்டங்களில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறித்துப் பேசுகையில், “ரயில்வே துறைக்குச் சொந்தமான அனைத்து காலியான நிலங்களும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் அங்கு சோலார் மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இந்த இட ஒதுக்கீடானது ஏலம் மூலமாகச் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ரயில்வே துறைக்குக் கணிசமான தொகை கிடைக்கும்” என்று கூறினார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon