மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சாதனை!

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் சாதனை!

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. போர்ட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்த நிலையில் தவன் வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரோஹித், கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

கோலி 38 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானேவும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரும் ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழந்தார். ரோஹித் உறுதியுடன் விளையாடி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 17ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். ரோஹித் 115 ரன் எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே வெளியேறினார். 42.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்த இந்தியா மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்ந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 44.2 ஓவரில் 238/6 என திடீர் சரிவைச் சந்தித்தது. அடுத்து ஷ்ரேயஸ் அய்யர் (30), மகேந்திர சிங் தோனி (13) ஆகிய இருவரும் வெளியேறினர். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (19), குல்தீப் யாதவ் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

275 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஏய்டன் மார்க்ராம் – ஹஷிம் அம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க்ராம் ஆட்டமிழந்தார். ஜே.பி. டுமினி, அதிரடி ஆட்டக்காரர் டி விலியர்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர். ஆம்லா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ஃபெலூக்வாயோ, ரபடா, ஷாம்சி, கிளாசன் ஆகியோர் குல்தீப் சுழலில் ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் நான்கு விக்கெட்டுகளையும், பாண்டியா, யுஜ்வேந்திர சஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதமடித்த ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆறு தொடர்கள் கொண்ட போட்டியில் 4-1 என்ற விகிதத்தில் முன்னிலை வகிப்பதுடன், தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாகத் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவர் 16) நடைபெறுகிறது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon