மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன்?

ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன்?

எடப்பாடி தலைமையிலான அரசின் ஆட்சியைக் கவிழ்க்காதது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்துப் பொதுமக்களும் மாணவர்களும் போராடிவரும் நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி திமுக சார்பாக தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறையைச் சீரமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று அளித்தார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 13) மாலை திமுக சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை 100 மடங்கு உயர்த்தியிருக்கிறார்கள். இதைக் கண்டித்து எங்கு பார்த்தாலும் போராட்டம் வெடித்துள்ளது. திமுக சார்பாக அனைத்துக் கட்சிகளையும் இணைத்துப் போராட்டம் நடத்தினோம். சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். சிறையிலே இடம் இல்லை. மறியல் செய்தவர்களைச் சிறைப்பிடிப்பதுதான் சட்டம். ஆனால், மறியல் செய்தவர்களைச் சிறை பிடிக்க வக்கற்ற ஆட்சிதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. அதன் பிறகு கண்துடைப்பு, கபட நாடகமாக ரூபாய் கணக்கில் உயர்த்திவிட்டு பைசா கணக்கில் குறைக்கிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். திமுக ஆட்சியிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அது மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவில் உயர்த்தப்பட்டது. இன்று போக்குவரத்துத் துறையைச் சீர்படுத்துவது குறித்து முதல்வரைச் சந்தித்து அறிக்கை கொடுத்துள்ளோம். தமிழக அரசு 2,000 சொகுசுப் பேருந்துகளை வாங்க இருக்கிறது. அதில் கமிஷன் பேரம் நடக்கவிருக்கிறதாக எனக்குத் தகவல் வந்துள்ளது, அப்படி நடந்தால் திமுக விடாது. நீதிமன்றம் வரை செல்வோம். கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையைச் சார்ந்தவர்களே கட்டண உயர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதை உயர்த்தாமல் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டது திமுக ஆட்சி” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “கலைஞர் ஒருமுறைகூட ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்டதில்லை. ஜெயலலிதாவுக்கும் ஜானகிக்கும் பிரச்னை ஏற்பட்டபோது எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று எத்தனை பேர் கோபாலபுரம் வந்தார்கள். அவர்களிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் நாங்கள் ஜனநாயகத்திலும் மாநில சுயாட்சியிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ஒருபோதும் ஆட்சிக் கவிழ்ப்புக்குத் துணை நிற்க மாட்டோம் என்று கூறினார். கலைஞர் முதல்வராக இருந்தபோது இரண்டு முறை அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டதே தவிர, கலைஞர் ஒருமுறை கூட ஆட்சிக் கவிழ்ப்புக்குத் துணை நின்றதில்லை.1976 எமர்ஜென்சி காலத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாங்களெல்லாம் மிசா சட்டத்தில் சிறையிலிருந்தோம். அதற்கு பின்னர் 13 ஆண்டு காலத்துக்கு ஆட்சியில் இல்லை. அதன் பிறகு 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறோம். இரண்டே வருடத்தில் இலங்கையிலுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி ஆட்சியைக் கலைத்தார்கள். ஆக, ஆட்சிக் கலைப்புக்கு என்றைக்கும் திமுக மற்றும் கலைஞர் காரணமாக இருந்ததில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசுகையில், “இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், கலைஞர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில்தான், ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோதே கலைஞருக்குச் செய்தி வந்துவிட்டது, ஜெயலலிதா ஆபத்தான நிலையில் பேச்சு மூச்சின்றி இருக்கிறாரென்று. அப்போது கலைஞர் எங்களைப் பக்கத்தில் அழைத்து, ‘ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடக்கக்கூடாதது ஒருவேளை நடந்துவிட்டால், அதிமுக உடையும். உடைகிறபோது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமே, தவிர அதைப் பயன்படுத்திக்கொண்டு கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது’ என்று தலைவர் சொன்னார்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

“நீங்கள் நினைப்பது போல மக்கள் நினைப்பது போல ஆட்சிக் கவிழ்ப்பு செய்திருக்கலாம், அதைச் செய்வதற்கு ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்காது. அதிமுக தலைமையில் குதிரைபேர ஆட்சி நடக்கிறது, எம்.எல்.ஏ.க்களுக்குப் படியளந்துகொண்டிருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் குறித்த வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குக்கூட இந்த ஆட்சி தாங்காது. இதை ஜோசியம் தெரிந்துதான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சட்ட விதிகளில் இருக்கிறது. ஒருவேளை ஆட்சியைக் கவிழ்த்து மாமூல் வாங்குகிற எம்.எல்.ஏ.க்களை நம் பக்கத்தில் வைத்திருந்தால் நம் நிலைமை என்னவாகும்? அவர்கள் என்ன அனுபவிக்கிறார்களோ அதை நாமும்தான் அனுபவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால்தான் நம்முடைய ஆட்சியை இருபத்தைந்து வருடம் யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்றார்

மேலும், தமிழக அரசின் மீது பல்வேறு ஊழல் புகார்களை முன்வைத்த ஸ்டாலின், “தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளில் ஊழல். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு மாதம்தோறும் மாமூல் சென்றிருக்கிறது. கல்குவாரியில் 250 கோடி ரூபாய் ஊழல். மணல் மாஃபியா கும்பல் சேகர் ரெட்டி மூலம் மாபெரும் ஊழல். வாக்கி டாக்கியில் 85 கோடி ரூபாய் ஊழல். மீனவர்களுக்கு வழங்கப்படும் வாக்கி டாக்கியில் ஊழல். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களுக்கு 30 சதவிகிதம் ஊழல். உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் விடுவதில் ஊழல், பல்கலைக்கழக ஊழல்” என்றார்.

தனது உரையின் இறுதியாக, “அதிமுகவினரிடம் கேட்கிறேன் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எங்கே இருந்திருப்பார்? சசிகலாவுடன் ஜெயிலில் இருந்திருப்பார். எனவே, தொண்டர்களே, பொதுமக்களே... இந்த குதிரை பேர கமிஷன் ஆட்சியை அகற்றுவதற்குத் தயாராகுங்கள்” என்று சொல்லி ஸ்டாலின் முடித்தார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon