மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

அருந்ததி வாய்ப்பைத் தவறவிட்ட மம்தா

அருந்ததி வாய்ப்பைத் தவறவிட்ட மம்தா

அருந்ததி படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை மறுத்ததை எண்ணி வேதனையடைந்தேன் என்று மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் பல்வேறு படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மம்தா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்த அவர், மீண்டும் நடிக்கவந்துள்ளார்.

இதுகுறித்து அவர் மும்பை டெய்லி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “முதலில் நல்ல படங்கள் எனக்குக் கிடைத்தன. அதற்குப் பின் வந்த சில படங்கள் சரியாக அமையவில்லை. சினிமாவில் சில வருடங்கள் நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். நடிக்கவந்த முதல் நான்கு வருடங்களில் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் சரியான கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. அருந்ததி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அனுஷ்காவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அந்தப் படத்தை இழந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதையெல்லாம் ஒருகட்டத்தில் உணர்ந்து எனது சினிமா வாழ்க்கையைப் புதுப்பித்து நடிக்க முடிவு செய்தேன். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களில் இன்னோர் உண்மை அதாவது புற்றுநோய் என்னைத் தாக்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது சினிமாவைவிட எனது உயிரைக் கவனிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருந்தேன்” என்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் மம்தா.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon