மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வாலன்டைன்ஸ் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளில் பரிசு வழங்குவதைப் போல பிரியத்துக்குரியவர்களின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு இனிப்புகளை வைப்பவர்கள் ‘ஜேக்’ என்று அழைக்கப்பட்டனர்.

ஸ்வீடன் நாட்டில் இந்த நாளை ‘அனைத்து இதயங்களின் தினம்’ என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் காதலர் தினத்தை “நமோரோடோஸ் டயாடாஸ்” என்று அழைக்கின்றனர். இதற்கு அர்த்தம் பாய் ஃப்ரெண்ட் மற்றும் கேர்ள் ஃப்ரெண்ட் தினம் என்பதாகும். ஸ்பெயினில் இந்த நாளை செயின்ட் வாலன்டைன்ஸ் என்று அழைக்கின்றனர். இப்படி வெவ்வேறு நாடுகளிலும் வித்தியாசமாக இத்தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

விதவிதமான ஆடைகளை உடுத்தியும், பரிசு பொருள்களைக் கொடுத்தும் இன்றைய நாளை மிக மகிழ்ச்சியாக கொண்டாடிவரும் நேரத்தில் சற்று உடையிலும் கவனம் கொள்ளுதல் அவசியம். எந்த எந்த உடைகள் அணிந்தால் என்ன என்ன காதல் அர்த்தம், அறிகுறிகள் என்றும் உள்ளது.

பச்சை நிற உடை - எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

ரோஸ் நிற உடை - இப்பதான் காதலை ஏற்றேன்.

நீல நிற உடை - இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்.

மஞ்சள் நிற உடை - காதல் தோல்வியடைந்தேன்.

கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது.

ஆரஞ்சு நிற உடை - நிச்சயதார்த்தம் செய்ய ரெடி.

சிவப்பு நிற உடை - என்னை விட்டுவிடுங்கள்.

கிரே நிற உடை- காதலில் விருப்பம் இல்லை.

வெள்ளை நிற உடை - ஏற்கெனவே காதலிக்கிறேன்.

சிவப்பு வர்ண பார்ட்டிகளுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூது விட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். இதற்கு போய் யாராவது நேரத்தைச் செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

கிரே நிறத்தை விரும்புபவர்கள் ‘காதலாவது கத்தரிக்காயாவது...’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால், குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வெள்ளை வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் வெள்ளை என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால், காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப் பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.

பச்சை வண்ண உடையை விரும்புபவர்களிடம் எளிதில் மனதில் என்ன உள்ளது என்பதை அறிய இயலாது. இவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். காதலை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள், காதல் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால், இதிலிருந்து பெண்கள் வேறுபடுவார்கள். இவர்களுக்குக் காதல் உணர்வுகள் அதிகமானதாக இருக்கும். காலம் முழுக்க காதலித்துக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பர்.

ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள் காதல் கனவுகள் நிறைய காண்பவராக இருப்பார்கள். தினமும் சிலரிடமிருந்து காதல் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். காதலை அனுபவித்து உணர்வார்கள்.

நீல நிற உடை அணிந்தவர்களின் காதல் ஆராய்ந்து தெளிந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து மீளமாட்டார்கள். இவர்கள் காதல் செய்வது அரிது. காதலித்ததால் காதலுக்காக உயிரையே கொடுக்கக் கூடிய அரிய வகையினர்.

இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். உடல் அழகாக இருப்பதைவிட இன்றைய நாளில் உள்ளத்தை அழகாக வைத்துக்கொண்டு மகிழ்வித்து மகிழ்வோம்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon