மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

முரண்டு பிடிக்கும் சிஐஎஸ்எஃப்: அதிருப்தியில் வழக்கறிஞர்கள்!

முரண்டு பிடிக்கும் சிஐஎஸ்எஃப்: அதிருப்தியில் வழக்கறிஞர்கள்!

உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அடையாள அட்டை காட்டினாலும், தமிழ்நாடு பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தால்தான் நீதிமன்றத்துக்குள் அனுமதிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் முரண்டு பிடிப்பது வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ்நாடு காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நீதிமன்றத்துக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் அவ்வப்போது நடைபெற்ற சண்டைகள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளைக் காரணம் காட்டி அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவின்படி நீதிமன்றத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. மேலும் மாநிலக் காவல் துறையின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு மத்திய தொழிற்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பும் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் செக் போஸ்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளே வருவோர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். வளாகத்தின் ஒரு பகுதியில் வழக்கறிஞர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்களும் தமிழ்நாடு பார் கவுன்சில் கொடுத்த அடையாள அட்டை அல்லது எம்ஹெச்ஏ எம்பிஏ கார்டைக் காட்டித்தான் உள்ளே செல்ல முடியும். மற்ற எந்த கார்டும் அங்கு அனுமதிக்கப்படாது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வருகை தந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அடையாள அட்டையைக் காண்பித்த அவர், வழக்கறிஞர்கள் செல்லும் பகுதியின் மூலம் உள்ளே செல்ல முயன்றார். ஆனால், அட்டர்னி ஜெனரலைத் தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் வீரர்கள், தமிழ்நாடு பார் கவுன்சில் அடையாள அட்டையோ அல்லது எம்ஹெச்ஏ எம்பிஏ அடையாள அட்டையோ வாங்கி வாருங்கள் என்று திருப்பி அனுப்பினர். தான் அட்டர்னி ஜெனரல் என்ற அவர் சொன்ன பிறகும்கூட உள்ளே அனுமதியளிக்கவில்லை. பின்னர் அங்கிருந்த வழக்கறிஞர்கள் பேசி அவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.

இது போன்றதொரு சம்பவம் நேற்றும் (பிப்ரவரி 13) அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா அர.சக்கரபாணி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வாதாடுவதற்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். அவருக்கும் இதுபோலவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் அனுமதி மறுத்து, பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உள்ளே அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் முறையிட்ட சி.எஸ்.வைத்தியநாதன், “வழக்கறிஞர் நுழைவுப் பகுதியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அடையாள அட்டையைக் கட்டினால் செல்லாது என்று சிஐஎஸ்எஃப் வீரர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு பார் கவுன்சில் அடையாள அட்டைதான் வேண்டுமென்று கேட்கின்றனர். ஆகவே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அடையாள அட்டையையும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். உடனே தலைமை நீதிபதி, “இதுபோன்றதொரு சம்பவம் இனி நிகழாது, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இதுகுறித்து அறிவுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மாலையில் சி.எஸ்.வைத்தியநாதன் மறுபடியும் வழக்கறிஞர் செல்லும் வளாகத்திற்குச் சென்று அங்குள்ள சிஐஎஸ்எஃப் ஆய்வாளரிடம், “உச்ச நீதிமன்ற அடையாள அட்டையை அனுமதிக்கலாம் என்று உங்களுக்கு ஏதாவது உத்தரவு வந்துள்ளதா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆய்வாளர், “இதுவரை எங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை. உத்தரவு வராதவரை நீங்கள் மீண்டும் வந்தால் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

‘தலைமை நீதிபதி அறிவுறுத்தியும்கூட எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. வராதவரை யாராக இருந்தாலும் உள்ளே விடமாட்டோம்’ என்று மத்திய பாதுகாப்புப் படையினர் கூறியிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon