மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

நெல்லை மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம்!

நெல்லை மக்களின் வாழ்க்கையைப்  பேசும் படம்!

‘கிருமி’ படப் புகழ் கதிர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிஇருக்கிறது.

ராமின் முதல் படமான கற்றது தமிழ் படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து அவரின் பல படங்களில் பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பின் மூலம் எழுத்துலகிலும், திரையுலகிலும் கவனம்பெற்ற மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகக் கவனம் பெறவுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், “எங்கள் செல்வத்தின் முதல் படம். அவனுடைய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் ‘பரியேறும் பெருமாள்’” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் தொடர்புகொண்டு பேசியபோது, “இந்தப் படம் நெல்லை மக்களின் வாழ்வைப் பற்றியது. படப்பிடிப்பு வேலைகள் முழுமையடைந்துள்ளன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்றார்.

‘படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளீர்கள். அதற்கான முயற்சிகள் எப்படி இருக்கிறது?’ எனக் கேட்டபோது, “ஆமாம். மார்ச் மாதத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்திருப்பதால் பணியைத் துரிதமாக்கிவருகிறோம். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.

நெல்லை மக்களின் மண் சார்ந்த காதல் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தை பா.ரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார். கதிருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon