மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

அதிருப்தியில் தோப்பு வெங்கடாசலம்!

அதிருப்தியில் தோப்பு வெங்கடாசலம்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும் திட்டங்களைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருப்பதாக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக இரு அணிகளாகச் செயல்பட்டுவந்த நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தினகரன் ஆதரவாளராக இருந்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்றக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளிக்கச் சென்றபோது தோப்பு வெங்கடாசலம் செல்லவில்லை. அதன் பிறகு முதல்வர் எடப்பாடி அணியின் ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் முதல்வர் மீதான தனது அதிருப்தியை நேற்று வெளிப்படுத்தியுள்ளார் தோப்பு வெங்கடாசலம்.

பெருந்துறையில் நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம், “இன்றைக்கு அம்மாவினுடைய ஆட்சி நடந்துகொண்டிருப்பதாகக் கூறினாலும்கூட, அம்மாவின் கொள்கைப்படி முழுமையாகச் செயல்படவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அம்மா இருக்கிறபோது உத்தரவு போட்டால் அது அப்படியே செயல்படுத்தப்படும். அம்மா காட்டிய பாதையில் நாம் உண்மைத் தொண்டனாகச் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “பெருந்துறை தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாம் ஒன்று கேட்டால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும் திட்டங்களைப் பெறப் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எதிர்க்கட்சி போல் நம்மை பார்க்கிறார்கள்” என்று தோப்பு வெங்கடாசலம் குற்றம்சாட்டினார்.

மேலும், ஜெயலலிதாவால் தடை செய்யபட்டிருந்த புகைப்படக் கலாசாரம் அதிமுகவில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாகவும் தலைவர்கள் படத்தைத் தவிர மற்றவர்களின் படங்களை வைக்க கூடாது என்றும் தோப்பு வெங்கடாச்சலம் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த தோப்பு வெங்கடாசலம், “தொகுதியில் குறிப்பிட்ட பள்ளியைத் தரம் உயர்த்த வலியுறுத்தியிருந்தேன். நீண்ட நாள்களாகவே மக்கள் கோரிக்கையைத்தான் கல்வித் துறையிடமும் கல்வி அமைச்சரிடமும் வலியுறுத்தியிருந்தேன். நான் கேட்டதற்கு மாறாக வேறு ஒரு பள்ளியைத் தரம் உயர்த்தி உள்ளனர். அப்படியானால் ஆளுங்கட்சியாக இருந்தாலும் நமக்கு என்ன மரியாதை உள்ளது என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon