மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

மூன்று நாள்களாக ஏதோ கோயில் பிரம்மோற்சவம் போல், நேற்றைய சிவராத்திரியைப் போல் களைகட்டி சிறப்பு ஆஃபர், சிறப்பு நிகழ்ச்சி என ஒருவழியாக காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத்தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில்தான். இ-மெயில், வாட்ஸ்அப், மெசஞ்சர், இன்டர்நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிட்டல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாக அழிக்க முடியவில்லை என்பது வியப்பு!

அமெரிக்கா போன்ற பல மேலைநாடுகள் வாலன்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையெல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வாலன்டைன்ஸ் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக்கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்ரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும், மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்ரவரி 14ஆம் நாளை புனித வாலன்டைன்ஸ் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் ஷேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ்பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வாலன்டைன்ஸ் டே” என்று தொடங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600களில் வாலன்டைன்ஸ் டே பிரபலமாக இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வாலன்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை ‘ஜேக்’ என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

பிரான்ஸ் நாட்டில் வாலன்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித வாலன்டைன்ஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போல தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வாலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர் டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய் ஃப்ரெண்ட் மற்றும் கேர்ள் ஃப்ரெண்ட் தினம்!

எந்த நாட்டில் எப்படி இருந்தால் என்ன? பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்.

ம்ஹூம்ம்ம்...

ஜோடியா சுத்துற (நல்ல ஒரிஜினல்) காதல் ஜோடிகளுக்கு வயித்தெரிச்சல் இல்லாத வளமான வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்வது, வாட்ஸப் வடிவேலு.

பின் குறிப்பு: I Am Single

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon