மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு

சிறப்புத் தொடர்:  உங்கள் மனசு

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

காதலும் மனநலமும்!

காதலைப் பற்றிப் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, அது ஆதாம் – ஏவாள் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதைத் தவிர. பழைமை வாய்ந்த அந்த உணர்வு, ஒவ்வொரு யுகத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதால் மட்டுமே உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் இருந்தே காதலை உளவியல்பூர்வமாக ஆராயும் வழக்கம் தொடர்ந்துவருகிறது.

இங்கிலாந்தில் காதல் பற்றிய ஆராய்ச்சிக்காக உளவியல் நிபுணர்களுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி செய்தபோது, காதலைக் கண்டிப்பாக ஆராய வேண்டுமா என்ற எதிர்க் கேள்விகள் முளைத்தன. அப்போது தோன்றிய எதிர்ப்பு, இப்போதுவரை நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.

ஆமாம், காதலை ஏன் அறிவியல்பூர்வமாக ஆராய வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினால், பல மனநலப் பிரச்னைகளுக்குக் காரணமாக காதல் இருப்பதை அறிய முடியும். அதே நேரத்தில், மனநல பிரச்னைகளால் சில அபத்தமான காதல்கள் உண்டாவதையும் தெரிந்துகொள்ள முடியும்.

விடையளிக்க முடியாத கேள்வி

எது காதல் என்ற கேள்விக்கு, எந்தக் காலத்திலும், யாராலும் விடையளிக்க முடியாது. காரணம், காதல் என்பதற்கான வரையறையை அந்தந்தக் காலகட்டத்தில் வாழும் மனிதனோ, அவன் சார்ந்துள்ள சமூகமோதான் தீர்மானிக்க முடியும். காதலால் ஒரு சமூகத்தில் உயர்ந்தவர்களும் உண்டு; தாழ்ந்தவர்களும் உண்டு. காதலித்தவரையே மாய்க்கத் துணிவதும், காதலுக்காகத் தன்னையே சிதைத்துக்கொள்வதும் இப்போது சர்வ சாதாரணம்.

ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க் என்ற உளவியல் அறிஞர், காதலை மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார். ஈர்ப்பு, பொறுப்பு, நெருக்கம் என்ற மூன்று அம்சங்கள் ஒரு காதலில் அமைய வேண்டுமென்கிறார். இதை முக்கோணக் காதல் கொள்கை (Triangular Love Theory) என்று சொல்வார்கள்.

நெருக்கமும் ஈர்ப்பும் இருந்தால் அது ரொமாண்டிக் லவ். இதில் கண்டிப்பாக பொறுப்பு இருக்காது. ஊர் ஊராகத் திரிந்தாலும், இவ்வகைக் காதலர்களுக்குக் கல்யாணம், குழந்தைகள் போன்ற பொறுப்புகள் ஆகவே ஆகாது. ஈர்ப்பும் பொறுப்பும் இல்லாமல், வெறும் நெருக்கம் மட்டுமே இருந்தால் அது இஷ்டம் (Liking). ஈர்ப்பும் பொறுப்பும் சிலரிடம் இருக்கும். ஒரு சிலரிடம் நெருக்கமும் பொறுப்பும் மட்டும் இருக்கும். இன்னும் ஒரு சிலருக்குப் பொறுப்பு மட்டுமே இருக்கும்; ஈர்ப்பும் நெருக்கமும் இருக்காது. அது வெறுமையான காதல். (Empty Love). வெறுமனே ஈர்ப்பு மட்டுமே இருந்தால் அது இனக்கவர்ச்சி (Infactuation).

காதல் என்பது மனநலம் சம்பந்தப்பட்டது. அதில் ஒரு பிரச்னை ஏற்பட்டால் மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டுமென்று சாமானியர்களுக்குத் தெரியாது. சிலர் தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்லி, மேலும் சிக்கலை அதிகப்படுத்திக்கொள்வார்கள்.

எல்லை மீறும் காதல்

நல்ல மனநல ஆரோக்கியத்துக்கு காதல் அவசியமான தேவை. அதே நேரத்தில், மனநலம் சார்ந்த பல பிரச்னைகளைக் காதலே உண்டாக்குகிறது என்பது மிகப்பெரிய முரண்தான். காதல் தோல்வியால் மன அழுத்தம், மது போதை, தற்கொலை முயற்சி, கொலை முயற்சியில் தன்னை சிதைத்துக்கொள்பவர்கள் இந்த யுகத்திலும் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் பெயரைப் பச்சை குத்திவிட்டு, அதன் பிறகு வேறொரு பெண்ணைக் காதலிக்கும் காரணத்துக்காக கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட மனிதர்களும் நம்மோடு வாழ்கிறார்கள். ரத்தத்தினால் காதல் துணையின் பெயரை எழுதுவதும், காதலுக்காகத் தன்னில் காயம் ஏற்படுத்திக்கொள்பவர்களும் உடனடியாக மனநல மருத்துவரை நாட வேண்டும்.

காதல் எப்படி உருவாகிறது என்ற ஆராய்ச்சியின் முடிவில், ஹார்மோன்கள் சுரக்க வேண்டிய வயதில் காதல் இயல்பாக வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, இனச்சேர்க்கைக்கான முன்னோடி காதல் என்றுகூடக் குறிப்பிடலாம்.

அருகில் இருத்தல்

காதல் உண்டாகக் காரணங்களே தேவையில்லை என்பதே உண்மை. ஆனாலும், சில அடிப்படையான விஷயங்கள் காதலைத் தீர்மானிக்கின்றன. எதிர் வீட்டில் வசிப்பது, ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவது, ஒன்றாகப் பயணிப்பது போன்றவற்றினால் அதிக அளவில் காதல்கள் உண்டாகின்றன. அருகில் இருத்தலே, இரண்டு மனிதர்களைக் காதலால் பிணைக்கிறது என்று சொல்லலாம். உங்கள் பக்கத்து வீட்டிலோ அல்லது எதிர்வீட்டிலோ தமன்னா வசித்தால், புவியியல் ரீதியான நெருக்கமே உங்களிடையே ஒரு காதலை உருவாக்கக்கூடும். இது ஓர் உதாரணம் மட்டுமே. இதனையே பின்பற்றுகிறேன் பேர்வழி என்று, தமன்னா வீட்டுக்கு எதிரே வாடகைக்கு வீடு கிடைக்கிறதா என்று தேடக் கூடாது.

ஒற்றுமை, வேற்றுமை உணர்வுகள்

தன்னைப் போன்றே சிந்திக்கும், செயல்படும், வாழும் மனிதரைக் காண்கையில், அந்த ஒற்றுமையே காதலுக்கு வழிவகுக்கும். இதற்கு நேரெதிராக, வேற்றுமையுணர்வும்கூடக் காதலைப் பிறக்க வைக்கும். அப்பாவியான ஆண்மகன், மிகுந்த தைரியத்துடன் பேசும் பெண்ணைக் காதலிப்பது இந்த ரகம்தான்.

சிறப்புத் திறமைகள்

நடனமாடுவது, பாடுவது, ஓவியம் வரைவது, எழுதுவது, இசைக்கருவிகளை இசைப்பது உள்ளிட்ட சிறப்புத் திறமைகளோடு இருந்தால், உங்களைச் சுற்றி தானாக ஓர் ஒளிவட்டம் தோன்றும். அது, உங்களைக் நோக்கி காதலை வரவழைக்கும்.

உடல் சார்ந்த ஆறுதல்

இது தவிர, மனம் மற்றும் உடல் சார்ந்த ஆறுதலும் தேவைகளும்கூடச் சில நேரங்களில் காதலை உருவாக்கும்.

இப்படி உருவாகும் அல்லது உருவாக்கப்படும் காதல் பக்குவமற்றதாக மாற, ஒரே ஒரு வார்த்தை போதும். அதன் பெயர் அதீத அன்பு என்றழைக்கப்படும் Possiveness. ‘முன்பு இருந்ததைப் போல இப்போது நீ நெருக்கம் காட்டுவதில்லையே’ என்ற எண்ணம் ஓர் ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தோன்றிவிட்டால் போதும். அவர்களது துணையின் பாடு திண்டாட்டம்தான்.

அதீத அன்பின் சுமைகள்

அதீத அன்பைத் தணிக்கும் வழியை, நாம் உடனடியாகக் கண்டறிந்தாக வேண்டும். அது நீர்த்துப்போகாமல் பெருகும்போது பயமாக மாறும். அது, சந்தேகங்களுக்கு இடமளிக்கும். அதனால் கோபம் உண்டாகும்; இதைத் தொடர்ந்து எரிச்சல் பெருகும். இந்த நிலைமை தொடரும்போது, ஒரு மனிதர் மன அழுத்தத்துக்கு ஆளாவார். அதீத காதலினால் கிடைக்கும் பரிசு இது. மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுக்காதபோது, அதுவே மனநோயாக முற்றும். இது உண்மையா என்றறிய, கையில் மது புட்டியுடனும் அருகில் நாயுடனும் மரத்தடியில் சாய்ந்துகிடக்கும் சில தேவதாஸ்களைப் பார்த்தால் போதும். சென்ற தலைமுறைக்கு தேவதாஸ் என்றால், இன்றைய யுகத்துக்கு தேவ் டி. வித்தியாசம் அவ்வளவுதான். ஆனால், காதலில் எந்த மாற்றமுமில்லை.

இரண்டுக்கும் ஒரே காரணம்தான்

இன்று, பலருடைய காதல் அனுபவங்களில் நிர்பந்தங்களே அதிகம் நிரம்பியிருக்கின்றன. இந்த வாரம் நீ செலவு செய்; அடுத்த வாரம் நான் செலவு செய்கிறேன் என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது. எந்தவோர் அம்சம் ஒரு காதலை உருவாக்குகிறதோ, அதுவே அது சிதைவதற்கும் காரணமாகிப் போகிறது.

இதற்கு உதாரணம், வசந்த் என்ற இளைஞனின் காதல் ப்ளஸ் மண வாழ்க்கை (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வசந்த், ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண், எப்போதும் அலுவலகத்துக்கு மினி ஸ்கர்ட் அணிந்து வருபவள். அதுவே, அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு வரக் காரணமாகிறது. அது காதலாகிக் கசிந்து, ஒரு நன்னாளில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

ஆனால், புகுந்த வீட்டில் நுழைந்த அந்தப் பெண்ணுக்கு, முதல் அனுபவமே அதிர்ச்சியை வரவழைக்கிறது. காரணம், வசந்தின் குடும்பத்தினர் கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் அந்தப் பெண்ணுக்கு நரகமாகிப் போனது. வீட்டில் தங்கை இருக்கும் நேரத்தில் நெருக்கமாக உறவாடாதே என்று அந்தப் பெண்ணிடம் சொன்னான் வசந்த். இப்படி ஆடையணிந்தால், வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்டான்.

அதன் பின், பிரைவஸி என்பதே அந்தப் பெண்ணுக்கு எட்டாக்கனியாகிறது. ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணிடம் பிடித்த அம்சங்கள் எல்லாமே வசந்துக்கு ஒவ்வாததாக மாறிப்போயின. அதன்பின், இருவரும் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? உண்மையைச் சொல்லப்போனால், இந்த முடிவை அவர்கள் காதலைத் தொடங்கும்போதே எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.

அதற்காக, வேற்றுமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் காதலிக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. அதைத் தங்கள் புரிதலால், அவர்கள் சரிசெய்து கொள்ள வேண்டும்.

மனநல மருத்துவரைச் சந்திக்க ஒரு நபர் வந்தார். அவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர். எத்தனை வருடமாக காதலித்தீர்கள் என்று மருத்துவர் கேட்க, எட்டு ஆண்டுகள் என்றார் அந்த நபர். இப்போது அந்தக் காதல் எந்த நிலையிலிருக்கிறது என்று மருத்துவர் கேட்க, எங்களுக்குத்தான் கல்யாணமாகிவிட்டதே என்று பதிலளித்தார் அவர். பெரும்பாலான காதல் ஜோடிகளின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என்பதே உண்மை.

காதல் என்பது எடுத்துக்கொள்வதல்ல; கொடுப்பது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள், எத்தனை காதலை மனதில் ஏந்தினாலும் துன்பத்தையே அனுபவிப்பார்கள். இதற்கு உதாரணமாக, கதிர் என்ற இளைஞனின் அனுபவத்தைப் பார்க்கலாம்.

(நாளை...)

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon