மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

தமாகாவைச் சேர்ந்த கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

குமரி மாவட்டம் படுவூரைச் சேர்ந்த ஜான் ஜேக்கப், கடந்த 2006, 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

வாசனின் தீவிர ஆதரவாளரான இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் விலகி தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கியபோது அதில் இணைந்தார். வாசனை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரில் இவரும் ஒருவர்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக கிள்ளியூர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார். இருப்பினும் கட்சிப் பணியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த ஜான் ஜேக்கப், 10 நாள்களுக்கு முன்பு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு தமாகாவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்து நேற்றிரவு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குமரி புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை ஜேக்கப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon