மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

என்னைக் கருணைக்கொலை செய்து விடுங்கள்: திருநங்கை!

என்னைக் கருணைக்கொலை செய்து விடுங்கள்: திருநங்கை!

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்துவிடும்படி ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஷானவி பொன்னுசாமி (வயது 29) பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன் பெண் தன்மையை மறைத்து, கடந்த 2010ஆம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பணிபுரிந்த பின்னர், முறையான பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். பின் தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி அதை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார். இவர் பெண்ணாக மாறியதை அறிந்த பெற்றோர்கள் ஷானவியை ஏற்க மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில்தான் ஏர் இந்தியாவில் இருந்து மீண்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். நான்கு முறை தேர்வில் தேர்ச்சி பெற்றும் இறுதிப்பட்டியலில் இவரது பெயர் தெரிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஷானவி ஏர் இந்தியா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சத்திடம் முறையிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் ‘எங்களது ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே, திருநங்கைகளுக்கு அல்ல’ என்று கூறி கைவிரித்துவிட்டனர்.

பின்னர் இது தொடர்பாக ஷானவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஷானவி தன்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

“பாலியல் தேர்வின் காரணமாகப் பெண்ணாக மாறினேன். எனது கனவான விமானப் பணிப்பெண் வேலைக்குத் தொடர்ந்து முயன்றேன். எனக்குத் தகுதி, திறமை எல்லாம் இருக்கிறது. ஆனால் நான் திருநங்கை என்பதைக் காரணம் காட்டி வேலை மறுக்கப்படுகிறது. இதற்கு மேலும் தொடர்ந்து போராட என்னால் இயலவில்லை. நான்கு முறை தொடர்ந்து முயற்சித்தும் விமான சேவைத் துறையில் எனக்கு வேலை மறுக்கப்படுவதால், வாழ வழியில்லை. எனவே என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon