மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: முருங்கை ஸ்பெஷல்!

கிச்சன் கீர்த்தனா: முருங்கை ஸ்பெஷல்!

இன்றைய காதலர் தின ஸ்பெஷலாக, காதல் எண்ணங்களை அதிகமூட்டும் முருங்கைதான் ஸ்பெஷல். எப்பொழுதுமே ஒன்று பத்தாமல் இரண்டு இருந்தால் மகிழ்வோம். அதனால், இன்று ஒன்றுக்கு இரண்டான முருங்கை ஸ்பெஷல். காதலர் தினத்தை கலர்ஃபுல்லாகக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்

முருங்கைக்கீரைப் பொரியல்:

ஒரு கட்டு முருங்கைக்கீரை, ஒரு டேபிள்ஸ்பூன் பயத்தம்பருப்பைக் கழுவி ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு தேவையான அளவு. ஒரு காய்ந்த மிளகாய். தேவையெனில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை.

முருங்கைக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நன்றாகக் கழுவி வடிகட்டிவிட்டுப் பின்னர் ஊற வைத்த பாசிப்பருப்போடு சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் தேவை எனில் வெங்காயமும் போட்டு வதக்கவும். வெங்காயம் போடாமலேயே நன்றாக இருக்கும். பின்னர் வேக வைத்து வடிகட்டி வைத்திருக்கும் கீரை - பருப்புக் கலவையைச் சேர்க்கவும். சர்க்கரை தேவை எனில் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சாதம் சாப்பிடும்போது சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நல்ல துணையான சைடு டிஷ் இது.

முருங்கைக்கீரைப் பொரித்த குழம்பு

முருங்கைக் கீரை ஒரு கட்டு, பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகக் குழைய வேக வைக்கவும். தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஒன்று, உப்பு, எண்ணெய் மற்றும் தாளிக்கக் கடுகு, உளுத்தம்பருப்பு.

காய்ந்த மிளகாய், மிளகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு போன்றவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றித் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும், தேங்காயையும் தேவையானால் வறுக்கலாம். பொதுவாகப் பச்சைத் தேங்காயே சத்து மிகுந்திருக்கும் என்பதால் வறுக்காமலே சேர்த்துக்கலாம். வறுத்த பொருள்களோடு தேங்காயையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

முதலில் பருப்பை நன்கு வேக வைக்கவும். பின்னர் கீரையை நன்கு அலசிக் கழுவிவிட்டுத் தனியாக வேக வைக்கவும். வெந்த கீரையை பருப்போடு சேர்த்துத் தேவையான உப்புப் போட்டு சற்று நேரம் வேக வைக்கவும். நன்கு வெந்ததும், அரைத்த கலவையைக் கொட்டிக் கிளறி விட்டுச் சற்று நேரம் குழம்பைக் கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

மேற்சொன்ன முறையிலேயே முருங்கைப்பூவையும் நன்கு கழுவி, அலசிக்கொண்டு வேகவைத்துப் பொரித்த குழம்பு செய்யலாம்.

கீர்த்தனா மொக்கைகள்:

‘உன்னை மட்டுமே காதலிக்கிறேன்’னு எழுதிய கிரீட்டிங் கார்டு இருக்கா சார்?

இருக்குங்க.

ஒரு 12 கார்டு கொடுங்க.

#இன்றைய நிலமை

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon