மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

காதலர் தின ஸ்பெஷல்: கண்கள் பேசும் காதல்!

காதலர் தின ஸ்பெஷல்: கண்கள் பேசும் காதல்!

தினேஷ் பாரதி

தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறை உலகில் ஆணும் பெண்ணும் பேஸ்புக், வாட்ஸ்-அப், மெசஞ்சர் என பல்வேறு சாதனங்களின் மூலம் காதலை வெளிப்படுத்திவருகிறார்கள். ஆயிரம்தான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் கண்களால் பேசிக் காதல் வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

காதலை வெளிப்படுத்துவதில் முதன்மையாக இருப்பது கண்கள். ஒரு பெண்ணுக்கு வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்துவதைவிட கண்களால் வெளிப்படுத்துவதே சுலபமானதாக இருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளைக் கோர்த்து காதலை வெளிப்படுத்த முனைவதை விட, ஒரு சிறு கண் சிமிட்டல் காதலுக்கான அங்கீகாரமாக இருக்கிறது. காதலுக்கு முதன்மையாக இருப்பதே கண்கள் என்றும் சொல்லிவிடலாம்.

இலக்கியங்களில் கண்கள்

தமிழ் இலக்கியத்தில் கண்களுக்கான வருணனைகள் விரவிக் கிடக்கின்றன. நம் வள்ளுவனாரையே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கண்கள் குறித்து அவர் ஒரு ஆராய்ச்சியே திருக்குறளில் நிகழ்த்தியிருக்கிறார். கண்கள் பற்றி இன்பத்துப்பாலில் பல குறளில் விவரித்துள்ளார்.

கண்டார் உயிர் உண்ணும் கண்கள்

மதுவை உண்டால் தான் மகிழ்ச்சி; காதலியின் கண்களைக் கண்டாலே மகிழ்ச்சி.

பெண்களின் கண்களில் இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று காதல் நோயை உண்டாக்கும்; மற்றொன்று அந்த நோய்க்கு மருந்தாக அமையும்.

கண்களால் திருடித் தின்னும் இன்பம் காதலில் சரிபாதி அல்ல பெரிது.

முன்பின் அறியாதவர் போல பொதுப் பார்வையில் காதல் பேசும் பார்வை காதலர்களிடம் உண்டு.

கண்ணுக்குக் கண் பேசும்போது வாய்ச் சொற்கள் தேவை இல்லை. என்றெல்லாம் கண்கள் பற்றி ஆராய்ச்சியே நிகழ்த்தியிருக்கிறார்.

கண்களைப் பாடிய திரைக் கவிஞர்கள்

திரைப்பாடல்களில் கண்கள் குறித்து அதிகமான வர்ணனைகளைக் கூறியவர்களில் முதன்மையானவர் கண்ணதாசன். ஒரு சமயம் எதற்காக உங்களின் முத்தையா என்கிற பெயரை கண்ணதாசன் என்று மாற்றினீர்கள் எனக் கேட்கப்பட்டது. பலரும் கண்ணன் மீதுள்ள பற்றினால் கண்ணதாசன் என வைத்துள்ளார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கண்ணதாசன் சொன்ன விளக்கம் பலரையும் ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும்தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டேன் எனக் கூறினார்.

கண்ணதாசன் தன்னுடைய பாடல்களிலும் சரி. கவிதைகளிலும் சரி. கண்கள் குறித்த வர்ணனையை அதிகமாய் கையாண்டிருப்பார். எத்தனை பார்வைகள் இருந்தாலும் காதலியின் பார்வையை கண்டுபிடித்து விடும் காதலர்களை பற்றி ஒரு பாடலில் இப்படி சொல்கிறார். ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ என்கிறார். கடலின் நீல நிறமே இவளின் கண்களில் உள்ள நீல நிறத்தால் வந்தது என்பதை ‘கண்களில் நீலம் கொண்டவளோ... அதை கடலில் கொண்டு கரைத்தவளோ” என்று வருணிக்கிறார்.

கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக வாலி பல பாடல்களில் கண்களை வருணித்தாலும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் ‘கண்ணாலே காதல் சொல் போதும்’ என்கிறார்.

வைரமுத்து ‘விழியில் விழுந்து இதயம் கலந்து உயிரில் கலந்த உறவே’ எனக் கண்கள் வழியாகக் காதல் மலர்வதைச் சொல்கிறார். பழநிபாரதி, ‘காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான்’ என்கிறார். தாமரை, ‘கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் வண்ணக் கவிதை காதல்’ என்கிறார். நா.முத்துக்குமாரோ, ‘உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே’ என்றும், ‘வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே’ என்றும் சொல்கிறார்.

கண்களை மையமாகக் கொண்ட படங்கள்

கண்களை மையமாகக் கொண்டு காதல் உருவாகும் படங்கள் நிறைய இருக்கின்றன. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தைச் சொல்லலாம். அந்த படத்தின் கதாநாயகனும், நாயகியும் கண்களாலே காதல் பேசுவார்கள். அதற்கடுத்தாக ஏ.எல். விஜய்யின் மதராசப்பட்டினம். காதலுக்கு ஏது மொழி என்பதை விளக்கும் விதமாகக் கண்களால் காதல் பேசுவதைச் சொல்லும் படம்.

உலக சினிமாவில் கண்களையே பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படமென ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி படத்தைச் சொல்லலாம். அவர் இயக்கிய பரான் (மழை) படத்தில் நாயகனும் நாயகியும் கண்களால் பேசிக்கொள்வார்கள். கடைசிவரை இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ள மாட்டார்கள். தன் காதலியின் சந்தோஷமே காதலின் சந்தோஷம் என்பதைச் சொல்லும் படமான இது சிறந்த காதல் படங்களுள் ஒன்று.

பாறை மனசையும் பூக்கச் செய்யும் பார்வைகள்

ஆண்களின் உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி பெண்ணின் கண்களுக்கு இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. பெண்வாசனையே வேண்டாமென்று ஒதுக்கும் ஆண்களையும் ஒரு பெண்ணின் பார்வை அவர்களின் மனதை மாற்றிவிடக்கூடும். திருமால் பெருமை படத்தில் பெண்களே வேண்டாமென்று ஒதுங்கியிருக்கும் சிவாஜியை பத்மினியின் பார்வை அவ்வாறாக மாற்றுகிறது.

இது போன்று பல படங்களில் நாயகியின் பார்வை நாயகனை நிலைகுலையச்செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். மலையூர் மம்பட்டியானில் தியாகராஜனை சரிதாவின் பார்வையும், அமர்க்களம் படத்தில் அஜித்தை ஷாலினியின் பார்வையும், நந்தாவில் சூர்யாவை லைலாவின் பார்வையும், சமீபத்தில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஷாலினி பாண்டேவின் பார்வையும், பிரேமம் படத்தில் நிவின் பாலியை சாய் பல்லவியின் பார்வையும் அவர்களின் முரட்டு சுபாவத்தை மாற்றும் பார்வைகளாக இருப்பதை நாம் பார்க்கலாம்.

கண்களின் வாஞ்சை

இதழ்கள் சொல்லும் பொய்களைக் கண்கள் எப்போதுமே காட்டிக் கொடுத்துவிடும். அதிலும் காதல் விஷயத்தில் கண்கள் எப்போதும் பொய் சொல்வதேயில்லை.

ஆண்களால் ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தும் பார்க்க முடியும். ஆனால் குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ள பொருட்கள் அவர்கள் கண்களில் படுவதில்லை அல்லது அதைப் பார்க்குமளவுக்கு அவர்களுக்கு சக்தி இருப்பதில்லை. உதாரணமாக சாவி, மொபைல் போன்றவற்றை வீட்டில் எங்கேயோ வைத்துவிட்டுத் தேடி அலைவார்கள். பெண்கள் அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

பெண்களின் இந்தக் கண் அமைப்புதான் ஆண்களை எளிதில் எடை போடவைக்கிறது. ஆனால் ஆண்களால் பெண்களின் பார்வைக்கான அர்த்தங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் ஒரு பெண் தன்னைப் பார்த்ததும் அது காதலுக்கான பார்வையா என ஆண் மனம் அவஸ்தைப்படுகிறது.

பெண்ணின் ஒரு பார்வைக்காகக் கால்களில் வேர்கள் முளைக்கக் காத்திருக்கும் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை ஒரு சாபமாக கருதாமல் வரமாகக் கருதுகிறார்கள். ஆண்கள் காதலை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். ஆனால் பெண்கள் பொதுவாக வெளியில் சொல்லாமல் தன் காதலனின் கண்களைப் படம்பிடித்து மனதுக்குள் பூட்டிவைத்துக்கொள்கிறார்கள்.

இமை அசைவுகளாலும் புருவ அசைவுகளாலும் காதலை வெளிப்படுத்துவதற்குக் கண்கள் காதலில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. கண்கள் என்பவை வெறுமனே காதலின் ஊடகம் அல்ல, காதலின் உயிரே கண்கள்தான்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon