மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ்!

மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் யோசனை எனத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். கல்புர்கி நகரில் தொழில்முனைவோர் மற்றும் வல்லுநர்கள் இடையே நேற்று (பிப்ரவரி 13) பேசிய அவர், “மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசின் எல்லா அமைச்சகங்களிலும் செயலாளர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பாலே நியமனம் செய்யப்படுகின்றனர். மத்திய அமைச்சர்கள் சுயமாகச் செயல்படுவதில்லை.

நிதி ஆயோக்கில்கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர். நிதி ஆயோக் அமைப்பு எந்த ஓர் அரசியல் கட்சியையும், கொள்கையையும் சாராதது. அங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய நபரை நியமனம் செய்துள்ளது. எல்லா இடங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பின் யோசனை என்றும் அவர் கூறினார். “பணமதிப்பழிப்பு யோசனை எங்கிருந்து வந்தது என்பது தெரியுமா? அது ரிசர்வ் வங்கியின் யோசனையோ, அருண் ஜேட்லியின் யோசனையோ அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பின் யோசனை. பிரதமரின் மூளைக்குள் ஆர்எஸ்எஸ் அந்த யோசனையை விதைத்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாக ஆசிய பிராந்தியத்தில் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் பிரச்னைகளை உருவாக்கிவிட்டது. இதனால் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா தனித்துவிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சீனா, ஆசிய பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் நெருங்கி வருகிறது.

அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதுதான் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். ஆனால், இன்று இந்தியா பிராந்திய அளவில் தனிமைப்பட்டு கிடக்கிறது.

ஆசிய பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கி இருக்கிறது. நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர் ஆகிய நாடுகளில் சீனா மெல்ல கால் பதிக்கத் தொடங்கிவிட்டது. இவை அனைத்துக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பிரச்னையே காரணமாகும். இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாகூட மேற்கத்திய நாடுகளை நோக்கி நகர்கிறது. இது மிகவும் கவலைகொள்ளும் விஷயம்” என்று வேதனைத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி குறித்துப் பேசுகையில், “மத்தியில் காங்கிரஸ் கட்சி 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்வோம். இப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அதிகமான வரி விதிப்பு காணப்படும் பொருள்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon