மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சிஆர்பிஎஃப் முகாம்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சிஆர்பிஎஃப் முகாம்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில், சிஆர்பிஎஃப் ராணுவ முகாமைத் தாக்க முயற்சி செய்துவிட்டு, தப்பியோடிய இரண்டு தீவிரவாதிகளை நேற்று (பிப்ரவரி 13) பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் ஸ்ரீநகரின் கரண் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள சிஆர்பிஎஃப் முகாமில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து இரண்டு தீவிரவாதிகள் தாக்க முயற்சி செய்தனர்.

இதைக் கண்டு, விழிப்புடன் இருந்த வீரர்கள் நடத்திய பதிலடியால் தீவிரவாதிகள் தப்பியோடிப் பதுங்கினர். தப்பியோடிய தீவிரவாதிகளை சுமார் 28 மணி நேரத்துக்கும் மேலாக வீரர்கள் தேடினார்கள். தீவிரவாதிகளைத் தேடும்போது, பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரவாதிகள் லஷ்கர் இ தாய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று நடைபெற்ற தேடுதல் பணியின்போது தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் சுஞ்சுவான் ராணுவ முகாம் மீது கடந்த சனிக்கிழமை காலை முதல் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் ஆறு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். நான்கு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், நேற்று ஜம்முவின் ராய்ப்பூர் டோமனா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமைத் தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon