மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

பத்மாவத்: ரூ.307 கோடி பங்கிடப்பட்டது எப்படி?

பத்மாவத்: ரூ.307 கோடி பங்கிடப்பட்டது எப்படி?

பத்மாவத் திரைப்படம் பலருக்கும் பலவிதங்களில் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன்பே கொடி உயர்த்தக் கூடாது என்று பத்மாவத் படத்துக்கு எதிராக போராடியவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது போலவே, உணர்வுபூர்வமான ஒன்றில் கைவைக்கும்போது எந்தளவுக்குக் கவனமாக செயல்பட வேண்டும் என்று படக்குழுவினருக்குக் கற்றுக்கொடுத்தது. பத்மாவத் திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளால், கண்டிப்பாக இந்தத் திரைப்படம், இதற்கு முன்பு உருவான படங்களையெல்லாம்விட அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.150 கோடியில் உருவான பத்மாவத் திரைப்படம் ரூ.307 கோடிகளை மட்டுமே திரும்பப் பெற்றிருக்கிறது.

வெளிநாடுகளில் கிடைத்த ரூ.87 கோடிகளை மொத்த வசூலிலிருந்து கழித்தால், ரூ.220 கோடிகள் மட்டுமே இந்தியாவில் பத்மாவத் படத்துக்குக் கிடைத்திருக்கிறது. தயாரிப்புக்கு செலவு செய்த ரூ.150 கோடிகளைக் கழித்தால் இவ்வளவு பிரமாண்டங்களுடன் உருவான ஒரு படத்தின் லாபம் ரூ.70 கோடி மட்டுமே. இப்படிப் பிரித்துப்பார்க்காமல், மொத்த ரூ.220 கோடியில் கணக்கிட்டாலும் தயாரிப்பாளருக்கு இந்தப் பெரிய தொகை அவ்வளவு திருப்திகரமானதாக இருக்காது.

100 ரூபாய்க்குள் விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18% ஜி.எஸ்.டி மற்றும் அதற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி என, பத்மாவத் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனையில் கிடைத்த பணத்தில் 20% தொகை (40 கோடிக்கும் மேல்) ஜிஎஸ்டிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. விநியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையேயான ஒப்பந்தம் எப்போதும், முதல் வாரத்தில் பாதிக்குப் பாதி என்றிருக்கும். அடுத்த இரண்டு வாரங்களில், ஒரு திரைப்படம் வசூல் செய்யும் பணம், விநியோகஸ்தருக்குச் சாதகமாக 60:40 என்றும், மூன்றாவது வாரத்தில் 70:30 என்றும் மாறுபடும். இரண்டாவது வாரத்தில் பத்மாவத் திரைப்படம் வசூல் செய்த 73 கோடியில் 43 கோடி விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளருக்குக் கிடைத்த பணத்தைவிட (ரூ.30 கோடி) அதிகம். ஒரு படம் எப்படி ஓடுகிறது என்பதைப் பொறுத்து இந்தப் பணப் பங்கீடு மாறுபடும். படம் நல்ல வசூல் கொடுத்தால் தயாரிப்பாளருக்குச் சாதகமாகவும், சுமாரான படம் என்றால் தியேட்டரில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக தியேட்டர் உரிமையாளருக்கு சாதகமாகவும் இது மாறுபடும். ஆனால், வெளிநாடுகளில் இந்த முறை எடுபடாது.

பத்மாவத் வெளிநாடுகளில் வசூல் செய்த ரூ.87.5 கோடியில் ரூ.39 கோடி மட்டுமே தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கிறது. மொத்தத் தொகையில் இது 45% மட்டுமே. ரூ.150 கோடி செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுத்து வியாபாரம் செய்து கிடைத்த ரூ.307 கோடி தியேட்டர் ரிலீஸ் முறையில் இப்படித்தான் பங்கிடப்படுகிறது. ஆனால், டிஜிட்டல் முறையில் இந்த நிலை மாறுகிறது.

பத்மாவத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.20 கோடிக்கும் மேலான தொகையைக் கொடுத்து வாங்கியிருக்கிறது. இத்திரைப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் 10 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. எனவே, தியேட்டர் ரிலீஸில் பத்மாவத் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குக் கிடைத்த தொகையை விடவும், அதிகமாக டிஜிட்டல் உரிமைகளை விற்றதில் லாபம் கிடைத்திருக்கிறது.

ஒரு நதி ஓடும் பாதையெங்கும் இருக்கும் நிலத்தை வளமாக்குவது போல, படம் உருவாக்கும்போது தொழிலாளர்கள் - கலைஞர்கள், அது ரிலீஸாகும்போது விநியோகிஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள், படம் வெற்றிபெற்றால் படைப்பாளிகள் என பலரது வாழ்வும் வளமாகி, கடைசியில் அந்த படைப்பு உருவாகக் காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு லாபம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சினிமா தொழிலில் டிஜிட்டல் முறைகள் புகுந்து மற்றுமொரு மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. தியேட்டர்களை மேலும் மெருகேற்றி, ஒரு திரைப்படத்தின் முழு பிரமாண்டத்தையும், சுவாரஸ்யத்தையும் ரசிகர்களிடம் கொடுப்பதில் கவனம் செலுத்தினால் டிஜிட்டல் சினிமா நோக்கி நகரும் மக்களைச் சிறிதளவேனும் தக்கவைக்கலாம். பத்மாவத் போல தியேட்டரில் மட்டுமே பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படங்களை ஊக்குவிப்பதன் மூலமே, அப்படிப்பட்ட ரசிகர்களை மேலும் கவர முடியும்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon