மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

ஹெல்த் ஹேமா: ஆரோக்கியமான காதல்!

ஹெல்த் ஹேமா: ஆரோக்கியமான காதல்!

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள். இன்று மட்டுமல்ல, என்றுமே இவைகளை உட்கொண்டு காதலோடு இருப்போம். அகிலமே கேட்பது சிறிய புன்னகையும் எதிர்பார்ப்பில்லா அன்பும்தானே.

தர்பூசணி பழத்தை, ‘நேச்சுரல் வயாகரா’ எனச் சொல்லலாம். இதில், அமினோ ஆசிட் சிட்ருலீன் (Amino acid citrulline) எனும் சத்து, வயாகராவுக்கு இணையான பலன்களைத் தரவல்லது.

வைட்டமின்களும் தாதுச்சத்துகளும் நிறைந்த இந்தப் பழம் மனதை காதலுக்கு வசப்படுத்துவதிலும், களிப்பில் உறவை நீடிக்கச் செய்யவும் பயன் தருகின்றன. குறிப்பாக, பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் காதல் உணர்வுகளுக்கு உறுதி தருவதில் ஆப்பிளைவிட மேலானது என்கிறது உணவு அறிவியல்.

பேரீச்சம்பழம் நெடுங்காலமாக அரபு நாட்டின் காதல் சின்னம். இங்கும் சித்த, ஆயுர்வேத மருந்துகளில் காமம் விளைவிக்க ‘கர்ச்சூர்காய்’ எனும் பேரீச்சம்காய் சேர்க்காத லேகியங்கள் இல்லை. பேரீச்சம் காதலுக்கு நல்லது.

ஸ்ட்ராபெர்ரி, காமம் மற்றும் காதல் தூண்டும் கனி. ‘ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டீரோன்’ எனும் காமம் ஊட்டும் ஹார்மோனை உசுப்புவதிலும், பெண்ணின் மனதை காதலின் உணர்வைத் தோன்ற வைப்பதிலும் ஸ்ட்ராபெர்ரிக்கு தொடர்பு உண்டு’ என்கிறார்கள் மேற்கத்திய உணவியலாளர்கள்.

* ஸ்ட்ராபெர்ரிக்கு உள்ள அந்தச் சக்தி நம்ம ஊர் நாவல் பழத்துக்கும் உண்டு.

* மாதுளையின் கனி ரசத்துடன் தொடங்கும் மாலைச் சிற்றுண்டி உணவு, காதலியுடனான இரவு விருந்துக்கு ஏற்றது.

* உலர் பழங்களில் பேரீச்சம், காய்ந்த திராட்சை, அத்தி இவை காதல் வைட்டமின் தருபவை.

* நீடித்த காதலுக்குக் குறைவான உப்பும் காரமும் நல்லது.

* ‘காதல் பானம்’ என்றால் ‘காபி’ என்கிறார்கள். காஃபின் சத்து கூடுதலாக உள்ள காபி உணர்ச்சிகளைக் கூட்டும்.

* காதல் மருந்து, சாக்லேட். சாக்லேட்டின் காதல் தூண்டும் மகத்துவம் குறித்துப் பேசாத உணவியலாளர்களே இல்லை என்று சொல்லலாம். சாக்லேட்டில் உள்ள கோக்கோவின் நரம்பைத் தூண்டும் சக்திதான் அதற்குக் காரணம்.

* முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் விதைகள் ஆண்களின் விந்தணுக்களைப் பெருக்கவும், பெண்ணுக்கு அதில் ஈர்ப்பை அதிகரிக்கவும் செய்பவை.

* ஜாதிக்காய், ஜாதிபத்திரி இரண்டுமே காதலுக்கான முதல் சித்த மருந்துகள். மிக மிகக் குறைந்த அளவில், சிட்டிகை அளவில் சாப்பிடும் ஜாதிக்காய் பலவற்றையும் சாதிக்கும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, முன்னதாக, மருத்துவரிடம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

உண்மையில் இந்த உணவுகளுடன் உள்ளபூர்வமான நேசமும் சேர்ந்தால், ஆண் பெண் இருவருக்கும் இடையில் காதல் மலரும்... மகிழ்வைத் தரும்.

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்

ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும். சர்க்கரை, மதுபானங்கள், காபியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும். எனவே, அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஓரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பாலியல் ஆசையைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் ‘டோஃபு’. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தைக் கிரகிப்பதைத் தடுக்கிறது. வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையைக் குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளைக் குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.

ஆரோக்கியமான காதல் அகிலமெங்கும் பரவட்டும்!

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon