மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

சிறப்புக் கட்டுரை: ‘அனைவருக்கும் வீடு’ அனைவருக்கும் பயனளிக்குமா?

சிறப்புக் கட்டுரை: ‘அனைவருக்கும் வீடு’ அனைவருக்கும் பயனளிக்குமா?

சங்கீத் சுகாதன், நிவேதிதா ஜெயராம்

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் 37 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய திட்டம் இந்தியாவின் நகரங்களில் நிலவும் வீட்டுத் தேவைகள் மற்றும் நகரங்களில் வாழும் ஏழைகள் மற்றும் வரம்பு நிலை மக்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வளிக்கும்?

ஆலைக்கு வெளியே சென்று அகமதாபாத் நகரத்தை நான் பார்த்ததே இல்லை. என்னுடைய மனதிற்குள் இயந்திரங்களின் சத்தம் தான் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்கிறார் கங்காராம். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்திலிருந்து அகமதாபாத்துக்கு வேலைக்காகக் குடியேறியவர். இவர் அகமதாபாத்தில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இங்கு மொத்தமாக 20 ஊழியர்கள் உள்ளேயே தங்கி பணிபுரிகின்றனர். இவர்கள் உண்பது, உறங்குவது, குளிப்பது, ஓய்வெடுப்பது எல்லாமே ஆடை தைக்கும் இயந்திரங்களுக்கு நடுவில் தான்.

இந்தப் பணியாளர்களின் சொந்த வாழ்க்கைக்கும் பணிக்கும் இடையே எந்தக் கோடும் இல்லை. தொடர்ந்து வேலை செய்வது மட்டுமே இவர்களுக்கு ஆபத்தான ஒன்றாக இல்லை. அதிகளவில் இவர்கள் சுரண்டப்படுவதும் முக்கியமான ஒரு பிரச்னையாகும். தேவை அதிகமாக உள்ள காலங்களில் இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கு விடுமுறையே கிடையாது. எப்போதாவது இயந்திரங்கள் பழுதாகி நின்றால் இரவில் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். அவர்கள் வேலையை முடித்துவிட்டு வெளியே செல்வதில்லை. இங்கேயே இருப்பதால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற மில்லியன் கணக்கான ஊழியர்கள் சொந்த ஊரை விட்டு வேலைக்காகக் குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் நகரங்களின் விளிம்புகளுக்கே தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தியாவின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீடமைப்புக் கொள்கைகள் பயனளிக்கவில்லை. கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்த சமூகப் பொருளாதார நிலைகளில் நலிவடைந்த மக்களின் எண்ணிக்கை 10 கோடியாகும். அதாவது பத்தில் ஒரு இந்தியர் கூலித் தொழிலாளியாக குடிபெயர்ந்துள்ளார்.

Inline image 1

இவ்வாறு குடிபெயர்ந்த மக்களுக்குச் சொந்த ஊரில் கிடைத்த ஊதியத்தை விடக் குறைவாகவும், குடியிருப்பு வசதிகள் சரியாகக் கிடைக்காமலும் அவதியுறுகின்றனர். சிறிய அளவிலான வீடோ, வேலை செய்யும் இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ தங்கும் நிலை ஏற்படுகிறது. சர்வதேச அளவில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக அகமதாபாத் விளங்குகிறது. இந்த நகரில் வாழும் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பெருமளவில் இந்தச் சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகமாகக் குடிபெயர்ந்தவர்களில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் உள்ள பழங்குடியினர்கள் தான். மேலும், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை மக்களும் குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த நகருக்கு சுமார் 13 லட்சம் மக்கள் குடிபெயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்த நகரில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காகும். உற்பத்தித் துறை, உணவகங்கள் மற்றும் கட்டுமானத் துறை ஆகியவற்றில் மிகக் குறைவான ஊதியத்திற்கு இந்த மக்கள் வேலை செய்கின்றனர். இருப்பினும் இவர்கள் 'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இதுகுறித்து சிவில் சமூக அமைப்பான வாழ்வாதாரப் பணியகம் கூறுகையில், "இந்த நகருக்கு வேலைக்காகக் குடிபெயர்ந்தவர்களில் பலர் வேலை செய்யும் இடத்திலேயே தங்கும் நிலை உள்ளது. இவ்வாறு தங்கிப் பணிபுரியும் மக்களின் அவலங்கள் இந்தச் சமூகத்தின் கண்களுக்கே தெரியாது. இன்னும் கூடுதலாக, இந்த நகரத்தில் 2,500 குடும்பங்கள் தங்குவதற்கு வீடோ, இடமோ இல்லாமல் திறந்தவெளிகளில் வசிக்கின்றனர். நடைபாதைகள், பாலங்களுக்கு அடியில், ரயில் பாதைகளுக்கு அருகில் மற்றும் திறந்த வெளிகள் போன்ற இடங்களில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தில் ரேசன் பொருட்கள், குடிநீர், துப்புரவுப் பணிகள், சமையல் எரிவாயு உள்ளிட்ட எந்த அடிப்படைச் சேவைகளும் கிடைப்பதில்லை என்பதைத் தாண்டி அவர்களுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்வது போன்ற அச்சுறுத்தல்களும் நடக்கின்றன.

ஷண்டாபென் அகமதாபாத்தின் நடைபாதையில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவர் குஜராத்தின் டாஹோத் கிராமத்திலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர். "நான் தினமும் அதிகாலை 3.00 மணிக்கே எழுந்துவிடுவேன். ஒவ்வொரு நாளும் காலை எழுந்து ஒரு மணி நேரம் வரை மலம் கழிக்கவே அலைய வேண்டியுள்ளது. ஒருவேளை அதற்கு மேலானால் என்னால் மற்ற வேலைகளை முடிக்க இயலாது. நான் நாகா கடையில் வேலை செய்கிறேன்" என்கிறார். இந்த நகரின் மக்கள் வசிக்கும் பகுதிகள் பெரும்பாலும் மிகவும் நெருக்கமான ஒன்றாகவே இருக்கின்றன. வெளியூரிலிருந்து வந்து இங்கு தங்கிப் பணிபுரியும் ஆண்கள் சுமார் 40,000 பேர் வாடகை அறைகளைப் பகிர்ந்துள்ளனர். இவர்கள் சுகாதாரமற்ற முறையிலும், எளிதில் நோய் தாக்கக் கூடிய வகையிலும் இங்கு வசித்து வருகின்றனர்.

இங்கு குடிபெயரும் ஆதிவாசி மக்களுக்கு இந்த நகரில் வீடு கிடைப்பதில் மிகுந்த பாகுபாடு நிலவுகிறது. குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இந்த மக்கள் தங்குவதற்கு முடுக்கப்படுகிறார்கள். தனியாக அறை எடுப்பவர்கள் 80 சதுர அடிக்குக் குறைவான இடத்திற்கே ரூ.500 வாடகை செலுத்த வேண்டிய அவலமும் நிலவுகிறது. இந்த அறைகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இருக்காது. "எங்களுக்கு எந்த இடமும் இல்லை. உடைந்த சுவர்களுக்கும், கூரைகளுக்கும் நடுவில் தான் நாங்கள் உறங்குகிறோம்" என்கிறார் மணிலால். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்திலிருந்து அகமதாபாத்திற்குக் குடிபெயர்ந்தவராவர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர்களுக்கு 'அனைவருக்கும் வீடு' திட்டம் நிறைவேறாத கனவாகவும், பொய்யான வாக்குறுதியாகவும் தான் உள்ளது. மத்திய அரசின் நிரந்தர வீட்டுத் திட்டங்களால் இதுபோன்ற தற்காலிக அல்லது இடமாற்றம் செய்து கொண்டிருக்கிற குடிபெயர்ந்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. இந்த நகரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை பிரச்னையைத் தீர்க்க இவர்களுக்கு ஒரு கண்ணியமான மற்றும் வசதியான குடியிருப்பு அவசியமாகிறது. வெளியூரில் ஆவணங்கள் கொண்டிருப்பவர்கள் வீடமைப்புத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இத்திட்டத்தில் வீடு கிடைப்பதே இல்லை. நகரத் திட்ட ஆணையம் உடனடியாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல குடிபெயர்ந்த ஊழியர்கள் நிரந்தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பணியைத் தான் மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் வேலை செய்வது, பாதுகாப்பற்ற பணியிடங்களில் வேலை செய்வது, மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டிருப்பது போன்ற சிக்கல்களைக் கொண்டுள்ளனர். இவர்களுடைய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் மாநில அரசு இவர்களைப் புறக்கணித்து வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் 'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தில் இம்மக்களின் தேவைகள் கண்டுகொள்ளப்படவில்லை. இவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களின் தேவை யாதெனில் 'சொந்த வீடு' என்பதே!

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon