மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே சிறந்தது!

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே சிறந்தது!

கடன் தள்ளுபடியை விடக் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டமே விவசாயிகளுக்குச் சிறந்த பலனை அளிக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து மேலும் இந்த ஆய்வறிக்கையில், 'மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு ரூ.80,000 கோடி தேவைப்படுகிறது. கடன் தள்ளுபடித் திட்டங்களை விடக் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டம் விவசாயிகளுக்குக் கூடுதல் பயனை அளிக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருவாய் பெருகும். விவசாயிகளின் சந்தை இழப்புகளைக் காக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டை விடக் குறைவாகவும் இத்திட்டத்திற்குச் செலவாவதற்கான வாய்ப்பும் உள்ளது. கடன் தள்ளுபடி கலாச்சாரம் விவசாயிகளுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பட்ஜெட் உரையில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏ2+எஃப்.எல் (உற்பத்தி செலவுக்கான விலை + குடும்ப வருவாய்) முறையில் 50 சதவிகித லாபத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் விவசாயிகளோ இந்த முறையில் வழங்கினால் எங்களுக்குப் போதுமான லாபம் கிடைக்காது. சி (ஏ2+எஃப்.எல்2+நிலத்திற்கான கடன் அல்லது குத்தகை செலவு) முறையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது