மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

இச்சுவை; அச்சுவை!

 இச்சுவை; அச்சுவை!

“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய் இராமானுசனை ஈன்றதன்றோ..,.’’ என்பது பாரதிதாசனின் பா வரிகள். திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி, தனக்கு திருமந்திரத்தை உபதேசித்த ஆச்சாரியர் திருக்கோட்டியூர் நம்பிகளின் எச்சரிக்கைகள் எல்லாவற்றையும் மீறி அனைவரும் முத்தி அடையும் வித்தையை அறிவித்த ராமானுஜர்... தன் இம்மையின் இறுதிகட்டத்தில் இருக்கிறார்.

அப்போதும் அவரது உடல் நலிந்துவிடவில்லை, அவரது சொற்கள் குலைந்திடவில்லை. இதை ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் விளக்கமாக எடுத்துரைத்திருக்கிறார்.

உடையவருக்கு அச்சுவையில் ருசியும் இச்சுவையில் அருசியும் ஏற்பட்டது. எனவே தனியே சென்று ஆழ்வார்கள் பாசுரங்கள் பலவற்றை மனமுருக சொல்லிக் கொண்டிருந்தார். பெரிய பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெரிய பெருமாளை சரண் அடைந்து, ‘காலம் தாழ்த்தாமல் அடியேனை உன் பொன்னடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று பிரார்த்தித்தார் ராமானுஜர்.

இச்சுவை அச்சுவை என்றால்?

பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே!

என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

திருவரங்கனே... மாபெரும் பச்சை மலை போன்ற திருமேனியும் பவளச் செவ்வாயும் தாமரை போன்ற கண்களும் பெற்றவனே... இமையார் தலைவனே, இடையர் குல இளங்குமரனே, உலகில் உன் பெயர் சொல்லிச் சொல்லி வாழ்வதால் ஏற்படும் இச்சுவையை, இந்தச் சுவையை விட்டுவிட்டு... வானுலகு ஆள்கின்ற மோட்சம் என்ற அச்சுவை கிடைத்தாலும் அதனை விரும்ப மாட்டேன். அரங்க நகரை விட்டு போகமாட்டேன் என்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

அதாவது இச்சுவை என்றால் திருவரங்கத்திலே இருந்து திருவரங்கனை வாயாற பாடிக் கொண்டிருப்பது.அச்சுவை என்றால் முத்தி பெற்று அரங்கனோடு அங்கே இருப்பது. தொண்டரடிப் பொடியாழ்வார் , ‘இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை’ வேண்டாம் என்கிறார்.

ஆனால் ராமானுஜர், ‘அரங்கா உன்னை இங்கே பார்த்துவிட்டேன். தினம்தினம் பார்த்துவிட்டேன். இனி எனக்கு இச்சுவை போதும் அச்சுவை தா’ என்று விண்ணப்பம் செய்கிறார்.

நாம் ஏற்கனவே மோட்சத்துக்கு பெரிய பிராட்டி பெருமாளிடம் பரிந்துரை செய்வதே புருஷகாரம் என்று பார்த்தோம் அல்லவா... அதுபோல், தனக்காக புருஷகாரம் செய்யும்படி பிராட்டியிடமும் வேண்டுகிறார் ராமானுஜர்.

ராமானுஜரின் உருக்கான வேண்டுகோளுக்கு அரங்கன் செவி சாய்த்தான்.

ராமானுஜரை நூற்று இருபது வருடங்களுக்கு முன்பு திருபெரும்புதூர் வழியாக பூமிக்கு கொண்டு வந்த அரங்கன்... தன்னுடைய மடியில் இருந்தே அவரை வானுலகுக்கு வழியனுப்ப முடிவெடுத்தான். ஆனால் இது ராமானுஜருக்கும் அரங்கனுக்கும் தவிர யாருக்கும் தெரியாது.

திருவரங்கத்தில் ராமானுஜர் தனித்திருப்பதை சிஷ்யர்கள் ஆச்சரியமாக பார்க்கத் தொடங்கினார்கள். எப்போதும் சிஷ்ய குழாமோடு பல்வேறு உபதேசங்களை சொல்லிக் கொண்டிருக்கும் ராமானுஜர்... தனித்திருந்து தமக்குள் ஆழ்வார்களின் பாசுரங்களை அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருப்பது வித்தியாசமான காட்சியாக இருந்தது.

ராமானுஜர் யாருடனும் பேசவில்லை. அமைதியை விரும்பினார். எத்தனையோ கொள்கை எதிரிகளை வாதப் போர் நிகழ்த்தி வென்ற அந்த வாய், ஆழ்வார் பாசுரங்களை அமைதியோடு அனுசந்தித்துக் கொண்டிருந்தது.

திடீரென சேரன் மடத்தில் இருந்து அரங்கன் சன்னிதிக்கு சென்று நெடுநேரம் உருகி உருகி சேவித்து முடித்த ராமானுஜர் மீண்டும் மடத்துக்குத் திரும்பினார்.

பெரிய பெருமாளின் தீர்த்தம், சடாரி, பரிவட்டம், மாலை பிரசாதம் ஆகியவை எம்பெருமானாருக்கு அணிவிக்கப்பட்டன. அரங்கன் உகந்தளித்த இந்த அருட் பிரசாதங்களோடு மீண்டும் மடத்துக்குத் திரும்பினார் உடையவர்.

ராமானுஜரின் கண்களில் ஒரு ரகசியம் மின்னிக் கொண்டிருந்தது.

என்ன ரகசியம் அது?

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனரான ஜெகத்ரட்சகன் ராமானுஜருக்கு விழா எடுத்து உலக வைணவ மாநாடாக அதைக் கொண்டாடியவர். அவரது அரும்பெரும் முயற்சியால் ராமானுஜரின் வைணவ வழியை பாமரர்களும் அறியும்படி செய்திருக்கிறார் வைணவச் செம்மல்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon