மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

டிஜிட்டல் திண்ணை: ‘அப்பா எப்படி இருக்காரு?’: ஸ்டாலினிடம் விசாரித்த எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: ‘அப்பா எப்படி இருக்காரு?’: ஸ்டாலினிடம் விசாரித்த எடப்பாடி

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. மெசேஜ் டைப்பிங் செய்ய ஆரம்பித்திருந்தது வாட்ஸ் அப்.

“பஸ் கட்டண உயர்வு குறித்த ஆய்வறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க திமுக தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் முதல்வர் பழனிசாமி. இன்று மதியம் ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டவர்கள் கோட்டையில் முதல்வரைச் சந்திக்கப் போனார்கள். முதல்வர் அறையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர் எனச் சில அமைச்சர்களும் இருந்தனர்.

ஸ்டாலின் உள்ளே வந்ததும், முதல்வர் எடப்பாடிதான் வரவேற்று அமரச் சொல்லியிருக்கிறார். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டார்களாம். பிறகு எடப்பாடியிடம் ஸ்டாலின், ‘கண் ஆபரேஷன் செஞ்சிட்டு வந்தீங்கன்னு சொன்னாங்க. இப்போ எப்படி இருக்கு? பார்வை தெளிவாகத் தெரியுதா?’ எனக் கேட்டாராம். அதற்கு எடப்பாடி, ‘ரொம்பவே நல்லா தெரியுது. வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூச்சம் அதிகமா இருக்குங்க...’ எனச் சொல்லியிருக்கிறார். ‘அது அப்படித்தான் இருக்கும்; ரெண்டு வாரத்துல சரியாகிடும். எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. நான் கருப்புக் கண்ணாடி போட்டதால தெரியலை. நீங்ககூட கருப்புக் கண்ணாடி பயன்படுத்துங்க...’ எனச் சொன்னாராம் ஸ்டாலின். அதற்கு அருகே இருந்த பன்னீர்செல்வம், ‘நானும் சொல்லிட்டேன். அவரு கேட்கலை...’ என்று சிரித்தபடியே சொல்ல... ‘மத்தவங்களுக்காக பார்க்காதீங்க.. உங்க ஹெல்த் முக்கியம்’ என ஸ்டாலின் சொன்னாராம். தலையாட்டிய எடப்பாடி, ‘அப்பா எப்படி இருக்காங்க? இப்போ எல்லோரும் பார்க்கிறாங்க. போட்டோவுலயும் வீடியோவுலயும் நானும் பார்க்கிறேன். சரியாகிடுச்சா?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்டாலின், ‘இப்போ பரவாயில்லை. கட்சிக்காரங்களைப் பார்த்தால் அவர் உற்சாகமாகிடுவாருன்னுதான் எல்லோரையும் பார்க்க அனுமதிக்கிறோம். நாம என்ன சொல்றோம் என்பதை அவரு புரிஞ்சுக்குறாரு..’ என்று சொன்னாராம்.

‘இந்த வயசுலயும் அவரு தளராம இருக்கக் காரணம், அவரோட தன்னம்பிக்கைதான்! நான் அவரை ரொம்பவும் விசாரிச்சேன்னு சொல்லுங்க. எனக்கும்கூட அவரை வந்து சந்திக்கணும்னு ஆசைதான். இங்கே இருக்கிற அரசியல் சூழ்நிலை உங்களுக்குத் தெரியும்...’ என்று எடப்பாடி சொல்ல... தலையாட்டியிருக்கிறார் ஸ்டாலின். ‘இப்படி ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் நலம் விசாரிப்பதென்பது நன்றாகத்தான் இருக்கு. நம்ம ஊருலயும் இந்தக் கலாச்சாரம் வரணும்...’ என்று பன்னீர் சொல்லியிருக்கிறார். ‘அந்தம்மா இருந்தவரைக்கும் நீங்க யாரும் நேருக்கு நேராகப் பார்த்தால்கூட பேசாமல்தான் போவீங்க.. இப்போதான் எல்லாரும் மாறியிருக்கீங்க. பார்க்கலாம்!’ என சேகர் பாபு கிண்டலாகச் சொன்னாராம்.

அதன் பிறகுதான் அறிக்கையை முதல்வரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக்கொண்ட பழனிசாமி, ‘இந்த அறிக்கையை வைத்து என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்கச் சொல்றேன். நீங்க எதுவாக இருந்தாலும் என்னோட கவனத்துக்குக் கொண்டுவாங்க. நிச்சயமாக குறைகளை சரி செய்யுறேன்...’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்ய ஆரம்பித்தது.

“காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக இருப்பவர் குஷ்பு. இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தீவிர ஆதரவாளர். இதனால் தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுகளில் குஷ்பு பங்கேற்க மாட்டார். அவருக்கு அழைப்பும் இருக்காது. குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் என்பது ஊருக்கே தெரிந்த கதைதான். அதனால் திருநாவுக்கரசர் இப்போது நக்மாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம். தியாகராய நகரில் பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் பேசிய கூட்டத்துக்கும் குஷ்புவுக்கு அழைப்பு இல்லையாம். இன்று வேளச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில் முதலில் நக்மா பெயர் இல்லையாம். கடைசி நேரத்தில்தான் நக்மா பெயரைச் சேர்த்திருக்கிறார் திருநாவுக்கரசர். நக்மாவுக்கான முக்கியத்துவம் இனி தமிழ்நாடு காங்கிரஸில் அதிகமாகும் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 13 பிப் 2018

அடுத்ததுchevronRight icon