மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

43 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சியில்லை!

43 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சியில்லை!

கடந்த வாரம், அண்ணா பல்கலைக்கழகம் 2017-2018ஆம் கல்வியாண்டின் பொறியியல் மாணவர்களுக்கான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டது. தமிழ்நாட்டில் 43 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவர்கூட முதல் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 466 பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். அதில் 141 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றுள்ளனர். 57 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள கல்லூரிகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளின் மோசமான செயல்திறனைச் சொல்வதென்றால், டிசம்பர் 2016ஆம் ஆண்டில் மூன்று கல்லூரிகள் பூஜ்ஜிய மதிப்பெண்களைப் பெற்றன; 12 கல்லூரிகள் ஒற்றை இலக்க முடிவுகளைப் பெற்றன.

அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் செயல்திறனை உள்ளடக்கிய ஓர் ஆவணம் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதிலுள்ள மதிப்பெண் பட்டியலில், பி.எஸ்.ஜி. என்ஜினியரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச் கல்லூரி 95.86% தேர்ச்சி பெற்றிருந்தது. முதல் 10 இடங்களில் SSN பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். மறுகூட்டலுக்குப் பின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஐடி கான்பூரின் முன்னாள் தலைவர் எம். அனந்தகிருஷ்ணன் , “12ஆம் வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் புளூபிரின்ட் போல் மனப்பாடம் செய்வதால் கல்லூரிகளில் தேர்வு எழுதுவது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும் மோசமாக உள்ளது. புளூபிரின்ட் போல் மனப்பாடம் செய்யும் போக்கைக் கைவிட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நிலைமை தொடரும் என்று நினைக்கவில்லை.

இந்த மாநிலத்திற்கு 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் தேவையில்லை. ஆனால் 530 கல்லூரிகள் உள்ளன. மீதமுள்ள 300 ஒற்றைக் கல்லூரிகளை மூட வேண்டும். ஒன்று அந்தக் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் அல்லது திறமை மேம்பாட்டு மையங்களாக மாற்றியமைக்கலாம்” என்று கூறினார்.

”கணிதக் கேள்வித்தாள் மிகவும் நன்றாக இருந்தது. பயன்பாடு சார்ந்த கேள்விகள் 50% - 70% ஆக அதிகரித்தது. இது மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கடினமாக்குகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் குறைந்திருந்தாலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இது ஒரு நல்ல நடவடிக்கை. நெருக்கடியான காலங்களில்கூட கேள்விதாளின் தரத்தைக் குறைக்கவில்லை” எனத் தொழில் ஆலோசகர் மற்றும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon