மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 11

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 11

கேபிள் சங்கர்

வட்டிக்கு வாங்கியோ, சொந்தப் பணத்திலோ படமெடுத்தாகிவிட்டது. போன வாரம் எழுதியது போல சின்ன பட்ஜெட் படங்களுக்கு வியாபாரம் என்பது கானல் நீரைவிட மோசமானது. அட்லீஸ்ட் எஃப்.எம்.எஸ் ஆவது விலை போய்க்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. இன்றைக்கு அதுகூட ஆர்டிஸ்ட் இல்லாத படங்களுக்கு எட்டாக்கனியாய் மாறிவிட்டது. அதற்குக் காரணம் புது நடிகர்கள் நடித்த படங்களின் தரமும், மார்க்கெட்டிங் இல்லாததும். மலேசியா, சிங்கப்பூர் டிவிகளில் இந்தப் படங்களைப் போடும்போது சமையல் நிகழ்ச்சிக்கு வரும் டி.ஆர்.பி.கூடப் பல படங்களுக்கு வராததால் அங்கேயும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பில்லாமல் போக, எஃப்.எம்.எஸ் வியாபாரிகளும் கை பிசைய ஆரம்பித்துவிட்டார்கள்.

சின்னப் படங்களைத் திரையரங்குகளில் வெளியிட முடியாது. அப்படியே செய்தாலும் பார்க்க ஆள் வருவார்களா என்பது சந்தேகமே என்கிறபட்சத்தில் வியாபாரிகளுக்கு இருக்கும் ஒரே ஆபத்பாந்தவன் சாட்டிலைட் டிவி ரைட்ஸ்தான். இங்கே ஆறு லட்சத்துக்கும் எட்டு லட்சத்துக்கும் வாங்கும் படங்களை அங்கே சாட்டிலைட் மட்டும் 10 லட்ச ரூபாய் வரை விற்றுவிட்டு, லோக்கல் டிவிடி வெளியிட்டு அதன்மூலம் ஒரு சில லட்சங்களோ, ஆயிரங்களையோ, பார்த்துவிட்டால் அதற்கு அப்புறம் அவர்களது வியாபாரம் அந்தப் படத்தின் வரவேற்பைப் பொறுத்தது. தற்போதைய புதிய வியாபாரமான ஸ்ட்ரீமிங் வீடியோ வியாபாரம் மூலம் சில லட்சங்கள் செய்ய முடியும். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மட்டுமே தெரியும் ஸ்ட்ரீமிங் சைட்டுகளில் ‘பே பர் வியூ’ போன்ற முறைகளுக்கு விற்பனை, விமானம், பஸ், போன்றவற்றில் திரையிடும் உரிமை என பிய்த்துப் பிய்த்து, அனைத்து ரைட்ஸுகளையும் விற்றுக் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் முதலீடு செய்த பணத்தை மீட்க முடியும்.

வெளிநாட்டு சாட்டிலைட் மட்டும் நல்ல விலை கிடைக்கவில்லையென்றால் மொத்தமும் அம்போ ஆகிவிடக்கூடிய நிலையும் வருமென்பதால் ரிஸ்க் உள்ள பிசினஸாகவே எஃப்.எம்.எஸ் கருதப்படுகிறது. அதிக லாபம் என்றெண்ணி, கஷ்டப்பட்டு மலேஷிய, சிங்கப்பூர் சேனல்களில் எல்லாம் லாபி செய்து, போட்டிப்போட்டு படம் வாங்கி நொந்து போனவர்கள் அதிகம் உள்ள பிசினஸ் இந்த எஃப்.எம்.எஸ்.

எஃப்.எம்.எஸ் வாங்கிக் கொடுப்பதற்காகவே மீடியேட்டர்கள் அதிகம் புழங்கும் ஒரு கூட்டம் கோடம்பாக்கத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் படம் பூஜை போட்டதில் ஆரம்பித்து, நல்ல புராஜெக்டாக இருந்தால் அட்வான்ஸ் எல்லாம் கொடுத்த நேரம் போய், தற்போது படம் ரிலீஸுக்குத் தயார் என்று விளம்பரம் பார்த்துவிட்டுத்தான் புரோக்கர்கள் தயாரிப்பாளரை அணுகுவார்கள். ஒரு புரோக்கர் ஒரு விலை வைத்துவிட்டால் உடனடியாக அதே விலையை ஒட்டி நான்கைந்து விசாரிப்புகள் வரும். அப்படி வரும் விசாரிப்புகளை வைத்து நம்ம படம் இவ்வளவுதான் போகுமென்று முடிவுக்கு வந்து அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் நடுவாந்திரமாய் ரேட் பேசி முதலில் ஃபிக்ஸ் செய்தவரிடமே வியாபாரம் செய்வார்கள். இவர் பிக்ஸ் செய்த பின் செய்த அத்தனை கால்களுக்கும் சொந்தக்காரர் இவரே. சற்றே உஷாரான தயாரிப்பாளர் இதிலிருந்து விலகி நின்று நான்தான் என் படத்தின் விலையை நிர்ணயிப்பேன் என்று நின்றவர்கள் பெரிய அளவில் சம்பாதித்தும் இருக்கிறார்கள். எவ்வளவுக்கு விற்றாலும் பத்து பர்சென்ட் கமிஷன் மீடியேட்டருக்கு.

ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் முதலில் நடக்கும் பிசினஸ் இந்தி உரிமைதான். அது சின்ன படமோ, பெரிய படமோ, நான்கைந்து சண்டைக் காட்சிள், குத்துப்பாட்டு, பேய், கிராபிக்ஸ், நாய், பூனை, மிருகங்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் பூஜை போட்ட அன்றே விலை போய்விடுகிறது. சமீபத்தில் பூஜை போடப்பட்ட பாம்பன் மற்றும், கொரில்லா இரண்டு படங்களின் இந்தி உரிமை சில பல கோடிகள் என்றால் நம்புவீர்களா?.

பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் பெரிய விலைதான். சமீபத்தில் தமிழில் வெளியான கடம்பன் படம் தமிழைவிட, இந்தி டப்பிங் ஏரியாவில் பெரிய ஹிட். நிறைய சண்டைகள், யானை போன்றவைதான் அட்ராக்ஷன். இந்தி என்றால் இந்தி மட்டுமில்லாமல், போஜ்பூரி, மராத்தி என அனைத்து பாஷையிலும், டப் செய்யப்பட்டு, டிவியில் சில லட்சங்களுக்கு விற்கப்படும். இதற்கென பெரிய ஆடியன்ஸ் இந்திய அளவில் இருக்கிறது தற்போது வரை. சின்ன பட்ஜெட் படங்கள்கூட மேலே சொன்ன சண்டை, பேய்க் கதை என்றால் நிச்சயம் ஒரு நல்ல விலை மார்கெட்டில் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துத்தான், செக்ஸ், பேய், சண்டைக் காட்சிப் படங்கள் எல்லா மாநில மொழிகளிலும் ஏரியாக்களில் தயாரிக்கப்படுகின்றன. நல்ல தரமான படங்கள் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட், இங்கே ஸ்ட்ரீமிங் எனக் குறுகிய வட்டத்திலேயே உழல வேண்டிய கட்டாயம் புதுத் தயாரிப்பாளர்களுக்கு.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கந்து வட்டி-1

கந்து வட்டி-2

கந்து வட்டி-3

கந்து வட்டி-4

கந்து வட்டி-5

கந்து வட்டி-6

கந்து வட்டி-7

கந்து வட்டி-8

கந்து வட்டி-9

கந்து வட்டி-10

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon