மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

இயக்குநர் பாரதிராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து ’தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. வைரமுத்து வருத்தம் தெரிவித்தும் அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இது தொடர்பாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் 'கடவுள் 2' படத்தின் துவக்க விழாவில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா பேசியிருந்தார். அந்தப் பேச்சில், “கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்தால் நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்கமாட்டோம்; வைரமுத்துவுக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், அதற்காக தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்” என்றதுடன் விநாயகர் ஓர் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்றும் விமர்சித்திருந்தார்.

இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகப் பாரதிராஜாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 13) நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், “பாரதிராஜா மீதான புகாரை விசாரிக்கவும், விசாரணையில் அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிந்தால் வழக்குப் பதிவு செய்யவும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon