மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஊர் ஊராய்ச் சுற்றும் சீனர்கள்!

ஊர் ஊராய்ச் சுற்றும் சீனர்கள்!

கடந்த ஏழு ஆண்டுகளாகவே பயணம் மற்றும் சுற்றுலாத் துறை ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் ஆய்வுப் படி, உலகப் பொருளாதாரத்தில் சுற்றுலா மற்றும் பயணத் துறை சுமார் 7.6 லட்சம் கோடி டாலர் பங்களிப்பை வழங்கியுள்ளன.

இப்புரட்சி ஆசிய நாடுகளில் தான் பெருமளவில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாகச் சீன நாட்டைச் சேர்ந்த பயணிகள் உலக நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதென்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சீனர்களைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே உண்பது, உறைவது, பயணிப்பது, ஷாப்பிங் செய்வது என்று தங்களது நேரத்தைப் பெருமளவில் செலவிடுகின்றனர். விமான நிலையங்கள், பயணிகள் கப்பல், தங்கும் விடுதிகள், சுற்றுலாப் பேருந்துகள் என எங்குப் பார்த்தாலும் சீனர்கள் தான். சீனாவில் ஆடம்பரமாக வாழ்வதை விட, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாகக் கழிப்பதையே அவர்கள் பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதுபற்றி லண்டன் நகரைச் சேர்ந்த ஸ்காட் டம்ன் என்ற ஆடம்பரச் சுற்றுலா சேவை அமைப்பைச் சேர்ந்த சைமன் ரசெல் கூறுகையில், இப்போதெல்லாம் மக்களின் சுய அடையாளம் என்பது அவர்கள் சுற்றுலா சென்று பார்வையிடும் இடங்களைப் பொறுத்தது என்றாகிவிட்டது, என்கிறார். தங்களது நாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்று செலவிடும் மக்களில் ஐந்தில் ஒரு பங்கை சீனர்கள் கொண்டுள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை விடச் சீனா இந்த அளவில் இரு மடங்காக உள்ளது என்று உலக சுற்றுலா அமைப்பு கூறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி சுற்றுலா அனுமதி கடவுச் சீட்டுகள் சீன அரசால் வழங்கப்படுகிறது என்பதிலிருந்து சீனர்களின் சுற்றுலா மீதான ஆர்வத்தைக் காணமுடிகிறது.

இப்போதெல்லாம் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது இவர்களுக்கு எளிதாகிவிட்டது. இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பயணங்களுக்கான முன்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் எளிதாகிவிட்டன. அவர்கள் சுற்றுலா செல்வதும், அவர்கள் பயணிக்கும் இடங்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்வதும் அவர்களை இன்னும் சுறுசுறுப்பாக்கியுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon