மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ராகுல் மீது விமர்சனம்: விஜயதரணி மீது நடவடிக்கை!

ராகுல் மீது விமர்சனம்: விஜயதரணி மீது நடவடிக்கை!

ராகுல் காந்தியை விமர்சித்து விஜயதரணி பேசியது தவறானது எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 13) காலை செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், “சட்டமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவான இடம். ஏழரை கோடி மக்களின் பிரதிநிதிகள் உள்ள இடம். தூய்மையின் சின்னமாக இருந்த ஓமந்தூராரின் புகைப்படம் சட்டப்பேரவையில் கிடையாது. ஜெயலலிதாவுக்கு முன்பாகவே இருந்த பெண் முதல்வர் ஜானகியின் புகைப்படமும் வைக்கப்படவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவசர அவசரமாக வைத்துள்ளனர். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரின் படத்திறப்பு விழா என்பதால்தான் பிரதமர், ஆளுநர் போன்றவர்கள் கலந்துகொள்ளவில்லை. 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையக்கூடிய வாய்ப்புள்ளது. அதனால்தான் அவசர அவசரமாக படத்தை வைத்துள்ளனர். விஜயதரணி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றபோதும், ’சபாநாயகரைப் பார்த்துப் பாராட்டினேன், முதல்வரைப் பார்த்துப் பாராட்டினேன்’ என்று தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.

ராகுல் காந்தியைக் கேள்வி கேட்பதற்கு விஜயதரணி யார்? ஒரு கட்சியின் தலைவரை வரம்பு மீறி பேசக் கூடாது. அவரது பேச்சு கட்சிக்குப் புறம்பாக உள்ளதாக காங்கிரஸ் தொண்டர்களே பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக விரைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்படும். அவரது பேச்சு சரியானதல்ல. நிச்சயம் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நேற்று பங்கேற்றுப் பேசிய விஜயதரணி, “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ராகுல், திருநாவுக்கரசர் போன்றோர் சென்று பார்த்தனர். அவரது இறுதி அஞ்சலியில் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போதெல்லாம் ஜெயலலிதா குற்றவாளி என அவர்களுக்குத் தெரியவில்லையா? என்னுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. உருவப்படத் திறப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon