மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

மோடியை அழைக்காத காரணம்?

மோடியை அழைக்காத காரணம்?

ஜெயலலிதாவின் படத்திறப்புக்கு மத்திய அரசிலிருந்து யாரையாவது அழைத்திருந்தால் பாஜகவின் அடிமை என்று விமர்சனம் செய்திருப்பர் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "படத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி, ஜனாதிபதி, கவர்னர் உள்ளிட்டோரை அணுகியுள்ளனர். குற்றவாளி என்று தீர்ப்பளித்த ஒருவரது படத்திறப்புக்கு நாங்கள் வர மாட்டோம் என்று அவர்கள் கூறியதால்தான் அவசரஅவசரமாக சபாநாயகரை வைத்துத் திறந்துவைத்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்று (பிப்ரவரி 13) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களிடம் ஜெ.படத்திறப்புக்கு தேசியத் தலைவர்களை ஏன் வரவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாரே என்றதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி "படத்திறப்புக்கு தேசியத் தலைவர்கள் வரவில்லை என்கிறார். பாஜகவிலிருந்து யாரையாவது அழைத்தால் பாஜகவின் அடிமை என்று கூறுகிறார்

ஜெயலலிதாவால் சபாநாயகராக்கப்பட்டவர் தனபால். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சபாநாயகர் ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைத்ததில் நாங்கள் பெருமையடைகிறோம். யார் படத்தை திறந்தாலும் அதில் தவறு கிடையாது" என்றும் பதிலளித்தார்.

மேலும், தமிழக அரசின் மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பிரதமர் படத்திறப்புக்கு வரவில்லை என்று தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, தினகரனிடம் தான் அதிருப்தியில் இருப்பதாகப் பிரதமர் கூறினாரா என்ன என்று பதிலளித்தார். மேலும் மின்வாரிய தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் வெளிநடப்பு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். .

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon