மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

நான் சுகர் பேஷன்ட், ரவுடியல்ல: பினு

நான் சுகர் பேஷன்ட், ரவுடியல்ல: பினு

சென்னை போலீசில் சரணடைந்த ரவுடி பினு, ’நான் பெரிய ரவுடியல்ல, சுகர் பேஷன்ட்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்த வீடியோவைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பூந்தமல்லி அருகே வேலு என்பவரின் மெக்கானிக் செட்டில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய ரவுடிகள் எனக் கூறப்படும் பினு, விக்னேஷ், கனகு ஆகியோர் தலைமறைவாயினர்.

கடந்த 6 நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த பினுவைச் சுட்டுப் பிடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) காலை அம்பத்தூர் போலீசில் அவர் சரணடைந்தார்.

இந்நிலையில் ’நான் பெரிய ரவுடியெல்லாம் கிடையாது, சுகர் பேஷன்ட்’ என்று காவல் துறையில் அவர் அளித்த வாக்குமூலம் வீடியோவைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ”என் 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கரூரில் இருந்து என் தம்பி என்னை வற்புறுத்தி அழைத்துவந்தான். திருந்தி வாழ வேண்டும் என்றுதான் கரூரில் வசித்துவந்தேன். நான் கரூரில் இருப்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

வந்த இடத்தில் அனைவரும் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகக் கூறி அனைத்து ரவுடிகளையும் வரவழைத்தான். எல்லாரும் வந்து என்னைப் பார்த்தபோதுகூட இதுவெல்லாம் தேவையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை, கேக் வெட்டும் கொண்டாட்டம் மட்டும்தான் என்று சொன்னார்கள். கையில் அரிவாளைக் கொடுத்து கேக் வெட்டச் சொன்னபோதே போலீஸ் எங்களை வளைத்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் கால்வாயில் குதித்துத் தப்பி ஓடிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்; இந்த ஒருமுறை என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon