மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பாலசந்தர் வீடு ஏலம்: மறுக்கும் கவிதாலயா!

பாலசந்தர் வீடு ஏலம்: மறுக்கும் கவிதாலயா!

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் வீடு அடமானம் வைக்கப்படவில்லை என்று கவிதாலயா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் கே.பாலசந்தரின் சொத்துக்களை அடமானம் வைத்து யூகோ வங்கியில் பெற்ற ரூ.1.36 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவரது வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வரவிருப்பதாக நேற்று (பிப்ரவரி 12)செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “கவிதாலயா நிறுவனத்தின் கடன் பாக்கிக்காக மறைந்த திரு.கே.பாலசந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளிவந்திருக்கும் பத்திரிகை ஊடகச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

கவிதாலயா, டிவி தொடர் தயாரிப்புக்காக அரசுடைமை வங்கி ஒன்றில் 2010இல் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்துக் கடன் வாங்கியது. 2015இல் திரைப்பட மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியைச் செலுத்துவதற்கு வங்கியுடன் ஒன்டைம் செட்டில்மென்ட் பேச்சுவார்த்தையைச் சட்ட ரீதியாக நடத்திவருகிறது.

இந்தச் சமயத்தில் வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து சமூக ஊடகங்கள் வழியாகத் திரு.கே.பியின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டது என்று உண்மைக்குப் புறம்பான செய்தி பரவிவிட்டது. எங்கள் மேல் உண்மையான அன்பும் பாசமும் கொண்டு எங்களைத் தொடர்பு கொண்ட நல்லிதயங்கள் இந்தத் தவறான செய்தியால் கலக்கமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யூகோ வங்கியின் சொத்து மேலாண்மைப் பிரிவின் சார்பாகக் கொடுக்கப்பட்ட ஏலத்துக்கான பொதுவான அறிவிப்பில் கே.பாலசந்தரின் இரண்டு சொத்துக்களும் சம்பிரதாய நடவடிக்கையாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து வங்கி தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon