மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ராணுவ முகாம்: தொடரும் தீவிரவாதிகள் தாக்குதல்!

ராணுவ முகாம்: தொடரும் தீவிரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுஞ்சுவான் ராணுவ முகாம், சிஆர்பிஎஃப் முகாமைத் தொடர்ந்து, இன்று(பிப்ரவரி 13) தீவிரவாதிகள் மற்றொரு ராணுவ முகாமைத் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சுஞ்சுவான் ராணுவ முகாம் மீது கடந்த சனிக்கிழமை காலை முதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 6 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 4 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தினங்கள் நடந்த இந்தத் தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்தியதாக உளவுத் துறைக்கு தகவல் வந்ததுள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த 2 தீவிரவாதிகள், முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜம்முவின் ராய்ப்பூர் டோமனா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமைத் தாக்கும் முயற்சியில் இன்று தீவிரவாதிகள் ஈடுபட்டனர். ராணுவ முகாமில் நடந்த இந்தத் தாக்குதலை அடுத்து, எல்லா இடங்களிலும் வீரர்கள் விழிப்புடன் இருந்தனர். அப்போது டோமனா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமிற்கு இரு தீவிரவாதிகள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அதைக் கண்ட ராணுவ வீரர்கள் விழிப்புடன் இருந்து அவர்களுக்குப் பதிலடி கொடுத்தனர்.

அங்கிருந்து தப்பியோடிய தீவிரவாதிகளை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும் ஸ்ரீநகரின் கரண் நகர்ப் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாமை நேற்று அதிகாலை தாக்க முயன்று தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணி அங்கு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றுவருகிறது.

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்தது குறித்து, முழு விசாரணை நடத்தாமல் எங்களைக் குற்றம் சாட்டாதீர்கள் எனப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon