மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

பியூட்டி ப்ரியா: காதலர் தினப் பயிற்சி!

பியூட்டி ப்ரியா: காதலர் தினப் பயிற்சி!

இப்போது டிரெண்டில் இருக்கும் காதல் பரிசுகளைச் சொல்ல வேண்டுமானால், வித்தியாசமான வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள், இதய வடிவ சாக்லேட்கள், காதல் தலையணைகள், காதல் டெடிபேர் பொம்மைகள், வண்ணமயமான துணை அலங்காரப் பொருள்கள், கேட்ஜட்கள், நகைகள், ஆடைகள் என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

காதலர் தினத்தில் கொடுக்கும் பரிசு எப்படியிருந்தாலும் ரொம்ப ஸ்பெஷல்தான். மற்ற நாள்களில் கொடுக்கும் பரிசுகளைவிடக் காதலர் தினத்தன்று கொடுக்கும் பரிசுகள், எப்போதும் நினைவில் இருக்கும். நம் நாடுகளில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது காதலர் தினம்.

கொரியாவில் பிப்ரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பதுதான் இந்த நாளின் விசேஷம். ஆனால், காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது எனப் புலம்பிய கொரியா மார்ச் 14ஆம் தேதியை வொயிட் டே, வெள்ளை தினம் எனக் கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.

காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்தவரையில் மங்கலான மெழுகுவத்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்ட்டாரன்ட்கள், மொட்டை மாடி ரெஸ்ட்டாரன்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வாலண்டைன் சாப்பாட்டின்போது ஷாபெயின் அருந்தாமல், ஒயின் அருந்த வேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

காதலர் தினம் மட்டுமல்லாது மற்ற நாள்களிலும் கண்களும், உதடுகளும், தோள்களும், கட்டுடலும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் தினம் தினம் பரிசுகள் வர வாய்ப்புகள் அதிகம்.

அவ்வப்போது சிற்சில பயிற்சிகளை மேற்கொண்டு ‘சிக்’ என உடலை வைத்துக்கொள்ளுங்கள்.

வயிற்றுப் பயிற்சி

தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் பெறவும். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும்போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும். இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகைத் தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளைத் தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்.

அழகான தோள்கள்

நல்ல வடிவமான தோள்கள் உங்கள் இடுப்பை சிறியதாகக் காட்ட உதவும். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களை நீட்டிக்கொள்ளுங்கள். இந்த நிலையில் தலை மற்றும் மார்பை உயர்த்தவும்.

தோள் பட்டையை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக்கொண்டு நிமிரவும். இந்த நிலையில் ஒன்று முதல் ஆறு வரை எண்ணவும். இந்த பயிற்சியை 12 தடவைகள் செய்யவும்.

முதுகுப் பயிற்சி

வலிமையான முதுகு உங்கள் தோற்றத்தை செம்மையாக்கும். உங்களை ஸ்லிம்மாகக் காட்ட உதவும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பாதங்களைத் தரையில் பதித்துக் கொள்ளுங்கள். அப்படியே முன்புறமாக முதுகை (நிமிர்த்திய நிலையில்) வளைத்து முழங்கால்களின் மீது மார்பு படும் நிலைக்கு வரவும். உங்கள் கைகள் ஒவ்வொன்றிலும் 2 அல்லது 3 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கீழ்புறமாகத் தொங்க விடவும். கைகளை மெல்ல தோளுக்கு இணையாக (பக்க வாட்டில்) உயர்த்தவும். பிறகு மெல்ல கீழிறக்கவும். 10 தடவை இப்படிச் செய்யவும். இடைவெளி விட்டுவிட்டு இந்தப் பயிற்சியை 3 முறை செய்யவும்.

இடுப்பு குறைய

படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும். வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன் பகுதியில் ஊன்றிபடி வைக்கவும். வலது காலின் மீது இடது கால் இருக்குமாறு வைக்கவும்.

இதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவுக்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும். பின்னர் மெதுவாக பொஸிஷனுக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இதனால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்துக்கு வரும்.

ஜன்னலைப் பிடித்துக்கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும். கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இது நல்ல பயிற்சியாகும். தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon