மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

தலைமறைவான தீபா கணவர்!

தலைமறைவான தீபா கணவர்!

தீபாவின் கணவர் மாதவன் கூறியதன் பேரிலேயே போலி வருமான வரித் துறை அதிகாரியாக நடித்ததாக பிரபாகரன் கூறியுள்ள நிலையில், மாதவன் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் இல்லம் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வருமானவரித் துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார். தகவல் அறிந்த செய்தியாளர்களும் போலீசாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்துத் தப்பியோடினார். மர்ம நபரை போலீசார் தேடிவந்த நிலையில், மாம்பலம் காவல்நிலையத்தில் நேற்று முன் தினம் அவர் சரணடைந்தார்.

தனது வாக்குமூலத்தை வீடியோவாகவும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித்தருவதாக மாதவன் கூறியதையடுத்து வருமான வரித் துறை அதிகாரியாக நடித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மாதவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் எந்தப் பதிலும் அளிக்காமல் தீபாவின் இல்லத்திலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில், மாதவன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பிரபாகரனின் குற்றச்சாட்டிலும் சந்தேகம் எழுந்துள்ளது. மாதவன் தன்னிடம் வாட்ஸ் அப் காலில் பேசியதாகக் கூறும் பிரபாகரன் அதனை அழித்துவிட்டதாகக் கூறியுள்ளார். கொரியரில் போலி அடையாள அட்டை தமக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறிய நிலையில், அதற்கான ஆதாரமும் இல்லை. தனது ஓட்டலுக்கு மாதவன் வந்துள்ளதாகப் பிரபாகரன் கூறியுள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுவருகின்றனர்.

இதற்கிடையே, போலி அடையாள அட்டையைத் தயாரித்ததில் மேலும் 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போலி வருமான வரிச் சோதனை சம்பவத்தின்போது சிக்கிய அடையாள அட்டை போன்ற ஆதாரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டே பிரபாகரனுக்கு அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜா மீது குற்றச்சாட்டு

இதற்கிடையே, மாதவனை அரசியலில் இருந்து வெளியேற்ற தீபாவும் அவரது டிரைவர் ராஜாவும் செய்த சதி இது என்று மாதவனின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக அவரது எம்ஜிஆர் ஜெஜெ திமுக கட்சியின் முகநூல் பக்கத்தில் சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முக்கியமாக, வழக்கமாக அதிகாலை எழுந்து வெளியே செல்லாதவர் தீபா. ஆனால் அன்று மட்டும் 5 மணியளவில் ஏன் தீபாவும் ராஜாவும் வெளியில் சென்றனர் போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon