மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

கொலைநகரா தலைநகர்?

கொலைநகரா தலைநகர்?

சென்னையில் இரவு நேரம் பெண்களுக்கு ஆபத்தானதாக மாறிவருகிறது. தனியாக நடந்து சென்றாலும்,வாகனத்தில் சென்றாலும், கணவருடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஐடி பெண் ஊழியர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததுமில்லாமல், அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, ஐபோனைப் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா ஜனாத் (30) சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள தாழம்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவருகிறார்.

வழக்கம்போல்,நேற்றிரவு (பிப்ரவரி 12) இவர் சென்னையை நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் இந்தப் பெண்ணின் பின் பக்கத் தலையில் அடித்துள்ளனர். இதனால், நிலை தடுமாறிய இவர் சாலையின் நடுவில் கீழே விழுந்தார்.

அப்போது, மர்ம நபர்கள் அவரைப் பாலியல் பாலத்காரம் செய்து, அவரிடமிருந்த 15 சவரன் நகை மற்றும் ஐபோன், இருசக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்தாலும், எழுந்திருக்க முடியாத நிலையில் இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.

காலையில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றியபோது, ‘டேய் விடுங்கடா… ஏன் இப்படி பண்ணுறீங்க…’ என புலம்பியிருக்கிறார்.

மருத்துவமனையில் சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.அவருக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான், மர்ம நபர்கள் குறித்த விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம், இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு இருக்கிறதா என்ற கேள்விக்குறியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon